நுால் முதல் ஆடை வரை உலகளாவிய சந்தையை திருப்பூர் கைப்பற்றுமா?

திருப்பூர்:பல்வேறு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் வரிவிலக்கு சலுகைகளால், இந்திய ஆடை உற்பத்தித் துறை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடை உற்பத்திக்கு தேவையான பருத்தி, நுால், செயற்கை இழை உள்ளிட்ட மூலப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாம் ஆகியவை நுால், துணி உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு பிற நாடுகளை சார்ந்துள்ள நிலையில், இந்தியா பெரும்பாலான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது.
இதனுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் வரிச்சலுகைகளும் சேர்வதால், வங்கதேசத்தைவிட இந்தியாவுக்கு அதிக ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜிப், பட்டன் உள்ளிட்ட துணை பொருட்களையும் இந்தியா உள்நாட்டிலேயே தயாரிப்பதால், விரைவான விநியோகம் மற்றும் தரமான பொருட்களை வழங்க முடிகிறது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல் கூறுகையில், ''மத்திய அரசு மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்களும், மூலப்பொருள் முதல் ஆடை தயாரிப்பு வரை அனைத்தும் உள்நாட்டிலேயே கிடைக்கும் வசதிகளும் இந்திய ஜவுளித்துறையின் மிகப்பெரிய பலம். சர்வதேச வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தரம், விரைவான வினியோகம் ஆகிய இரண்டும் நம்மிடம் உள்ளன. இதனால், திருப்பூர் ஆடை உற்பத்தித்துறைக்கு அடுத்த 10 ஆண்டுகள் நிச்சயம் பொற்காலமாக அமையும்,'' என்றார்.