Religion
வரவேற்பு போடி– தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடம் தினசரி இயக்கினால் ஆன்மிக சுற்றுலாவிற்கு பயன்படும்
தேனி, செப். 5–போடி– தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கினால் வரும் நாட்களில் சபரிமலை செல்வோர், ஆன்மிக பயணம், சுற்றுலா செல்வோர் அதிகம் பயன்படுத்துவார்கள் என கோரிக்கை எழுந்துள்ளது.
போடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 2023ல் இருந்து அதிவிரைவு ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டது. கடந்த மார்ச்சில் இருந்து வாரத்திற்கு 6 நாட்கள் இருமார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், சேலம், காட்பாடி வழியாக சென்ட்ரல் செல்கிறது. இந்த ரயிலை மாவட்டத்தில் இருந்து திருப்பதி, சென்னை செல்வோர் அதிகம் பயன்படுத்துகின்றனர். தாம்பரம், சென்னை எழும்பூருக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் கடந்த ஜூனில் தாம்பரம்– போடி இடையே சனிகிழமையும், மறு மார்க்கத்தில் ஞாயிற்று கிழமையும் கோடை கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, மதுரை வழியாக போடிக்கு இயக்கப்பட்டது. தேனியில் இருந்து டெல்டா மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் மாங்குரோ காடுகள், சுற்றுலா தலங்கள், தஞ்சை பெரியகோயில், சிதம்பரம் நடராஜனர் கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு செல்ல வசதியாக இருந்ததால் இந்த ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஜூலையில் நீட்டிக்கப்பட்டது. ஆனால் ஆக.,ல் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் தாம்பரம்–போடி இடையே செப்., 12,19,26 மறுமார்க்கத்தில் செப்., 13, 20,27ல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அக்., வரை ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முன்பதிவும் துவங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது.
நிரந்தரமாக இயக்க வேண்டும் சோமசுந்தரம், ஓய்வு மின்வாரிய செயற் பொறியாளர், தேனி. சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்கினால் சபரிமலை செல்லும் பக்தர்கள், மூணாறு வரும் சுற்றுலா பயணிகள், தேனி, இடுக்கி மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி,சிதம்பரம், தஞ்சை செல்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த பட்சம் வாரத்தில் மூன்று நாட்களாவது இயக்க முன்வர வேண்டும். மேலும் போடியில் இருந்து மதுரைக்கு தினசரி காலை ரயில் இயக்க வேண்டும். புனலுாரில் இருந்து மதுரைக்கு அதிகாலை 3:30 மணிக்கு வரும் ரயிலை போடி வரை நீட்டிக்கலாம். அந்த ரயிலை மீண்டும் காலையில் போடியில் இருந்து மதுரைக்கு இயக்கலாம். அங்கு பராமரிப்பு செய்து மாலையில் போடிக்கு இயக்கலாம். மீண்டும் போடியில் இருந்து புனலுாருக்கு இயக்கினால் பயணிகள் பயனடைவார்கள் என்றார்.