Politics
சிவகாசி அண்ணா நகரில் குடிநீர் இணைப்பு இல்லை
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி 25 வது வார்டு அண்ணா நகரில் 50 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு இல்லாமல் வாகனங்களில் சப்ளை செய்வதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி 25 வது வார்டு அண்ணா நகரில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்பகுதியில் இது வரையிலும் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு முன்பு புழக்கத்திற்கான தண்ணீர் வினியோகம் செய்வதற்காக குழாய் பதிக்கப் பட்டது.
ஆனால் மேல்நிலைத் தொட்டி கட்டப்படாத நிலையில் இதுவரையிலும் அந்த தண்ணீரும் வினியோகம் செய்யவில்லை. இந்நிலையில் மாநகராட்சி வாகனம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை வாகனங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்தத் தண்ணீர் அனைவருக்கும் போதவில்லை. மேலும் குடிநீரும் பற்றாக்குறையாக இருப்பதால் இப்பகுதியினர் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே மாநகராட்சி சார்பில் குழாய் குழாய் பதித்து மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
கதிரேசன், குடியிருப்புவாசி, இப்பகுதி உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒரு ஆண்டிற்கு முன்பு கடமைக்கு என குழாய் பதித்தனர். ஆனால் தொட்டி கட்ட வில்லை. எனவே இப்பகுதியில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.