Economy, business and finance
காய்கறி மார்க்கெட்டை ஏலம் விட வேண்டி நகராட்சி அலுவலகத்தை கவுன்சிலர்கள் முற்றுகை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரூ.5.41 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டை திறந்து ஏலம் விட வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது..
விருத்தாசலத்தில், காட்டுக்கூடலுார் சாலையில் நகராட்சி காய்கறி மற்றும் இறைச்சி மார்க்கெட் இயங்கி வந்தது. இந்த மார்க்கெட் கடந்த தி.மு.க., ஆட்சியில் (2022 – 2023) கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.5.41 கோடி செலவில் ‘ஏ’ பிரிவில் 127 கடைகள், ‘பி’ பிரிவில் 48 மற்றும் ‘டி’ பிரிவில் 15 என மூன்று பரிவுகளாக 190 கடைகள் கட்டப்பட்டன. மேலும், குடிநீர், கழிவறை, மின் விளக்குகள் மற்றும் பார்க்கிங், பேவர்பிளாக் தரைத்தளம் உள்ளிட்ட வசதிகள் செய்து முடிக்கப்பட்டன.
சட்டசபை தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் காய்கறி மார்க்கெட் திறக்கப்படவில்லை. இதனால், நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.8.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, கடந்த ஜூலை மாதத்தில், ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், காய்கறி மார்க்கெட்டை திறந்து, ஏலம் விடக்கோரி, பா.ம.க., கவுன்சிலர் சிங்காரவேல் தலைமையில் தே.மு.தி.க., ராஜ்குமார், தி.மு.க., பாண்டியன், அன்பழகன் உள்ளிட்ட 12 கவுன்சிலர்கள் நேற்று பகல் 11:30 மணிக்கு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காய்கறி மார்க்கெட் திறக்காததால், நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கொண்டுள்ளதால் காட்டுக்கூடலுார் சாலையில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது என்றனர்.
கவுன்சிலர்களிடம், கமிஷனர் நாகராஜ் பேச்சவார்த்தை நடத்தினார். அப்போது, சட்டசபை நிகழ்வு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. இந்த வார இறுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபின், அடுத்த வாரம் மார்க்கெட்டை ஏலம் விட கலெக்டரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனையேற்று கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.