Politics
சேதமடைந்த வீட்டில் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர்; வீட்டைச் சீரமைத்து தந்த தவெக எம்.எல்.ஏ
ஏழ்மை நிலை காரணமாக சேதமடைந்து போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள ஓட்டு வீட்டில் மழைக்காலங்களில் என் மகனை வைத்து மிகவும் சிரமப்படுகிறேன் எனக் கூறியுள்ளார். | Tvk mla renovates damaged home of a differently-abled Vijay fan

ஏழ்மை நிலை காரணமாகச் சேதமடைந்து போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள ஓட்டு வீட்டில் மழைக்காலங்களில் என் மகனை வைத்து மிகவும் சிரமப்படுகிறேன் எனக் கூறியிருந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி- சகுந்தலா தம்பதி.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். மகன் விக்னேஸ்வரன் பிறந்ததிலிருந்தே மாற்றுத்திறனாளியாக உள்ளார். இவரை இவருடைய அம்மா சகுந்தலா கூலி வேலைக்குச் சென்று கவனித்து வந்துள்ளார் .இதனிடையே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது த.வெ.க-வின் வேட்பாளர் சுனில் ஆனந்த் வாக்கு சேகரிக்க அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அப்போது மாற்றுத்திறனாளியான தன் மகன் விக்னேஸ்வரன் விஜய்யின் தீவிர ரசிகன் எனவும், ஏழ்மை நிலை காரணமாகச் சேதமடைந்து போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள ஓட்டு வீட்டில் மழைக்காலங்களில் என் மகனை வைத்து மிகவும் சிரமப்படுகிறேன் எனவும் கூறிய சகுந்தலா, நீங்கள் வெற்றி பெற்றால் தங்கள் வீட்டைச் சீரமைத்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்படி தேர்தலில் வெற்றி பெற்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் உடனடியாக அவர்களின் வீட்டை ரூ.5 லட்சம் செலவில் சீரமைத்து கொடுத்துள்ளார். மேலும் சீரமைக்கப்பட்ட வீட்டை அவர்களின் பயன்பாட்டிற்காக சுனில் ஆனந்த் வழங்கியுள்ளார். வாக்குறுதியை நிறைவேற்றிய சுனில் ஆனந்திற்கு சகுந்தலா குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இதேபோல தன்னை வெற்றி பெறச் செய்த மேட்டுப்பாளையம் தொகுதி மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவேன் என சுனில் ஆனந்த் கூறியுள்ளார்.
