ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
உதம்பூர்:ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் மஜல்தா எல்லையோரத்தில் உள்ள பிரட்டல் சோஹன் மற்றும் குப்பன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு செப் .,16 இரவு ராணுவத்தின், 'ஒய்ட் நைட்ஸ்' படைப்பிரிவினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ஜம்மு - காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு, போதிய வெளிச்சம் இல்லாத சூழ்நிலையில் பாதுகாப்பு படையினர் நெருங்கியதை அறிந்த பயங்கரவாதிகள் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டதில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான காஷ்மீர் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.