Arts, culture, entertainment and media
TASMAC | 3 மாதம் டைம்... காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு செக்! - ஐகோர்ட் உத்தரவு

டாஸ்மாக் காலி பாட்டில்களைத் திரும்பப் பெற ரிவர்ஸ் வென்டிங் மெஷின்களை நிறுவ தமிழக அரசுக்கு 3 மாத அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல், பணியாளர்கள் சுமையைக் குறைக்கும் வகையில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெற ரிவர்ஸ் வென்டிங் மெஷின் இயந்திரங்களை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களையும், மது பாட்டில்களையும் தூக்கி வீசுவதால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களைத் திரும்பத் தரும் பட்சத்தில், 10 ரூபாயைத் திருப்பித் தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், கே. ராஜசேகர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், ஜூலை 31-ஆம் தேதி வரை திரும்பப் பெற்ற பாட்டில்கள், அவற்றை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை குறித்து விவரங்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், பணியாளர்கள் சுமையைக் குறைக்கும் வகையில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெற ரிவர்ஸ் வென்டிங் மெஷின் இயந்திரங்களை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவைக்கு 4,000... மதுரைக்கு ரூ.5,000... கிடுகிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம் ; பயணிகள் அவதி
அரசுத் தரப்பின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசுக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், காலி பாட்டில்களைத் திரும்பப் பெற இயந்திரங்களை நிறுவும் திட்ட நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், அதுவரை தற்போதைய நடைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.
