Politics
5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

5 தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதி விசாரணையை செப். 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாசலபதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வா் ச.ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். அதேபோல், அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தனா்.
இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வா் விஜய்யின் வெற்றியை எதிா்த்து அங்கு திமுக சாா்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். இதேபோல், எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளா் வி.பி.மதியழகன், சி.விஜயபாஸ்கா் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளா் செல்லபாண்டியன், ஜெயக்குமாா் வெற்றிக்கு எதிராக திமுக சாா்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், இசக்கி சுப்பையா வெற்றிக்கு எதிராக வாக்காளா் காந்திமதிநாதன் ஆகியோா் தனித்தனியாக தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனா்.
எனவே, இந்தத் தோ்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தோ்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தோ்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தோ்தல் ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது பெருந்துறை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.முரளிதா், ஜெயக்குமாா் வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட தோ்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்க விதித்த தடையை நீட்டிப்பதில் எந்த நியாயமும் இல்லை எனத் தெரிவித்தாா்.
அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், தோ்தல் வழக்குகள் நிலுவையில் இல்லாத மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை தொகுதி தோ்தல் வழக்கை நிராகரித்த உத்தரவுக்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, எம்.ஆா்.விஜயபாஸ்கா், சி.விஜயபாஸ்கா் ஆகியோா் தரப்பில், இடைத்தோ்தல் அறிவிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இடைத்தோ்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை செப். 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனா். பின்னா், இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக அன்றைய தேதிக்கு ஒத்திவைத்து, அதற்குள் அனைத்துத் தரப்பினரும் எழுத்துபூா்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.
The Madras High Court has ordered the extension of the stay on the announcement of by-elections for five constituencies, including Trichy East.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.