ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
உடுமலை: உடுமலையில், மீனம்மாள் அறக்கட்டளை சார்பில், 450 ஏழை, எளிய மக்களுக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர். இவர், நடத்தி வரும் மீனம்மாள் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில், பழநி கீரனூர் சன்மார்க்க குருகுலம் செயலாளர் திருப்பதி, ஓய்வு பெற்ற தாசில்தார் தாஸ், ஓய்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் செல்லத்துரை உள்ளிட்டோர் அறக்கட்டளை செயல்பாடுகளை பாராட்டிப்பேசினர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என, 450க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகைப்பொருட்கள், சேலை, போர்வை உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய தொகுப்பை கிருஷ்ணன் வழங்கினார்.
தாயுமானவர் அறக்கட்டளை நிறுவனர் ஜானகிராம், கைகொடுக்கும் அறக்கட்டளை நிறுவனர் சரவணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உடுமலை வட்டார செயலாளர் சுதா கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.