கத்திப்பாரா பாலத்தில் இருந்து விழுந்த இளைஞர் பலி
ஆலந்துார்: கத்திப்பாரா மேம்பாலத்தில் நடந்த கோர விபத்தில், 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி 'யமஹா ஆர்15' பைக்கில், 22 வயது மதிப்புடைய இளைஞர்கள் இருவர் நேற்று மாலை, அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தனர். கத்திப்பாரா மேம்பாலத்தின் மீது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. மேம்பாலத்தின் இடது பக்கம் உள்ள பக் கவாட்டு தடுப்பு சுவரில் பைக் மோதியது.
வாகனத்தில் வந்த இருவரும், மேம்பாலத்தில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்தனர். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
தகவலறிந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிய நபரை மீட்டு, கிண்டியில் உள்ள நுாற்றாண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் விபத்தில் பலியானது விழுப்புரம் மாவட்டம், தாழனுார் கிராமத்தை சேர்ந்த ஜீவா, 22; பத்திர எழுத்தர் என்றும், காயமடைந்தவர் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த பேரரசு, 20, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிப்பதும் தெரிந்தது.
