கர்நாடகாவில் மீட்கப்பட்டவர் குடும்பத்தினருடன் சேர்ப்பு
திருக்கோவிலுார்: கர்நாடகாவில் கொத்தடிமையாக கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட திருக்கோவிலுாரைச் சேர்ந்த தொழிலாளியை மீட்டு வருவாய்த் துறையினர் குடும்பத்தினரிடம் சேர்த்தனர்.
திருக்கோவிலுார், வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி, 48; இவர் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கங்கனதொட்டி கிராமத்தில் கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வந்தபோது, கொத்தடிமையாக நடத்தப்பட்டதை கர்நாடக மாநில வருவாய்த் துறையினர் கண்டறிந்து மீட்டனர்.
அவரை வேலுாரைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட பழனியை, திருக்கோவிலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், வி.ஏ.ஓ., வேல்முருகன் ஆகியோர் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் முறைப்படி சேர்த்தனர்.