Economy, business and finance
ஏர்டெல், ஜியோ அளித்த முறைகேடு புகார் வோடபோன் ஐடியாவிடம் டிராய் விசாரணை

புதுடில்லி: மொபைல் எண்ணை மாற்றும் எம்.என்.பி., வசதியை அளிப்பதில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, வோடபோன் ஐடியா நிறுவனம் மீது பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் அளித்த புகாரை, டிராய் விசாரித்து வருகிறது.
எம்.என்.பி., சேவை வழங்குவதில் வோடபோன் ஐடியா நிறுவனம், நியாயமற்ற வணிக நடவடிக்கைகளை பின்பற்றி போட்டி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை தங்கள் சேவைக்கு மாற்றுவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ குற்றஞ்சாட்டியுள்ளன. அந்நிறுவனத்திடம் இருந்து மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பாமலும், தள்ளுபடி திட்டங்களை அளிப்பதாக கூறி வாடிக்கையாளர்களை கவர்வதாகவும் புகார் அளித்துள்ளன.
போட்டி நிறுவனங்களின் அதிகாரிகள் போல் நடித்து சிலர் வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வதாகவும், விரைவில் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகவும், ஏற்கனவே உள்ள திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் கூறி, வோடபோன் ஐடியாவுக்கு மாறும்படி வாடிக்கையாளர்களை துாண்டுவதாகவும் ஏர்டெல், ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிராய் விசாரணையை துவங்கியுள்ள நிலையில், குற்றச்சாட்டுகளை வோடபோன் ஐடியா மறுத்துள்ளது. எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம், தனது தரப்பு விளக்கத்தை டிராய் அமைப்பிடம் அளிக்க உள்ளதாக கூறியுள்ளது.