பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கூட்டம்
உடுமலை: உடுமலை அருகே ஜல்லிபட்டியில், பட்டு விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
மத்திய பட்டு வாரியத்தின் சார்பில், பட்டு தொழில்நுட்ப பரிமாற்ற இயக்கத்தின் கீழ், ‘என் பட்டு; என் பெருமை’, என்ற தலைப்பில், இந்த தொழில்நுட்ப ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி இம்மானுவேல் கில்வாஷ் பிரபு மல்பெரி தோட்டத்தில், பூச்சி மேலாண்மை மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
மேலும், மல்பெரி தோட்டத்தில் நேரடி செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திலகவதி, அரசு பட்டுக்கூடு அங்காடிகளில், பட்டுக்கூடுகளை சந்தைப்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார்.
பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்று, பட்டு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். ஜல்லிபட்டி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.