டாக்டர் தொழில் சம்பாதிக்க அல்ல

கோவை: ''டாக்டர் தொழில் சம்பாதிப்பதற்காக அல்ல,'' என, கே.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் பேசினார்.
திருவண்ணாமலை, வேலு நகர், தென்மாத்துாரில், அருணை மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் கீழ் செயல்படும் அருணை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா, நேற்று நடந்தது.
கோவை கே.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்து பேசுகையில், ''கடவுள் நினைத்தால் மட்டுமே டாக்டராக முடியும். எங்கு பிறந்தோம் என்பது முக்கியமில்லை. எதற்காக பிறந்தோம் என்பது முக்கியம். டாக்டர் தொழில் சம்பாதிப்பதற்காக அல்ல. மருத்துவமனை என்பது கோவிலுக்கு மேல். டாக்டர் மீது மதிப்பு இருக்க வேண்டும். டாக்டர்களுக்கும் தங்கள் நிலை புரிய வேண்டும். இன்று, நோய் குறித்து சமூகவலைதளங்களில் பலர் அறிந்து கொள்கின்றனர். டாக்டர்கள் அதை விட அதிகம் தெரிந்திருக்க வேண்டும்,'' என்றார். அருணை மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை துணைத் தலைவர் குமரன், மருத்துவ இயக்குநர் டாக்டர் கம்பன் ஆகியோர் பேசினர்.