பெரிய வெங்காயத்தை தொடர்ந்து விலை உயரும் சின்ன வெங்காயம்
மானாமதுரை: தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சாம்பார் வெங்காயம் என்றழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்லாரி வெங்காயம் கடுமையாக விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.35க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே சற்று விலை குறைந்திருந்த சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வாரச்சந்தையில் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் வாரச்சந்தையில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயம் ஒன்றரை கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவம் தவறிய கனமழை காரணமாக வெங்காயம் விளையும் பகுதிகளில் விளைச்சலும், அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வழக்கமாக 65 லாரிகளில் வெங்காயம் வரும் நிலையில் தற்போது பாதியாக 30 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதேபோன்று தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் வெங்காயம் குறைந்த அளவிலேயே வருகிறது.
செப்., அக்., மாதங்களில் நடைபெறும் பண்டிகைகளினால் வெங்காயத்தின் தேவை அதிகரிப்பதாலும் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் சில வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றனர்.