Politics
“முதல்வர் விஜய் 2ஆம் புரட்சித் தலைவர்...” - துரை வைகோ எம்.பி. பேட்டி!

பரபரப்பான அரசியல் சூழலில் மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது, “புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தைப் பொறுத்தவரைக்கும், பட்டினப்பாக்த்தை ஆங்கிலத்தில் ‘Foreshore Estate (கடற்கரை முகப்பு)’ என்று சொல்லக்கூடிய அந்த இடத்தில் கொண்டு வரப்பட்டால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இரண்டாவதாக, அங்கு உள்ள பத்துக்கும் மேற்பட்ட மீனவக் குப்பங்களுக்கு ஆபத்து வரலாம். அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று பலரும் கூறுகின்றனர். பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், சில சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்களும் இதுகுறித்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எங்களுடைய கருத்தாக, மதிமுகவின் கருத்து என்னவென்றால், இவை அனைத்தையும் மனதில் கொண்டு, சுற்றுச்சூழலாக இருக்கட்டும், மீனவர்களுடைய வாழ்வாதாரமாக இருக்கட்டும், போக்குவரத்து நெரிசலாக இருக்கட்டும், ஏற்கனவே சென்னையைப் பொறுத்தவரைக்கும், ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் இருக்கிறது.
இந்நிலையில், மறுபடியும் சென்னைக்குள்ளேயே தலைமைச் செயலகத்தை கொண்டு வருவது மக்களுக்கும், சென்னை நகரத்துக்கும் மிகப்பெரிய இடையூறாக இருக்கும் என்று சொல்லி, நான் ஒரு முன்மொழிவைக் கொடுத்தேன். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பிறகு, அவரை சென்னையில் சந்தித்து 12 கோரிக்கைகளை முன்வைத்தேன். அதில் திருச்சி, புதுக்கோட்டை சம்பந்தமாக ஒன்பது கோரிக்கைகளும், மீதி மூன்று கோரிக்கைகள் பொதுவான கோரிக்கைகளாகவும் இருந்தன.
அந்த மூன்று பொதுவான கோரிக்கைகளில் நான் வைத்த கோரிக்கை என்னவென்றால், சென்னை தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், இன்று தமிழ்நாட்டின் தலைமை நிர்வாகம் சென்னையில் இருக்கிறது. அதனால், திருச்சியை ஒரு மாற்று அல்லது இரண்டாவது தலைநகராக கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னேன். எப்படி இந்தியாவுக்கு டெல்லி நிர்வாகத் தலைநகராகவும், மும்பை நிதித் தலைநகராகவும் இருக்கிறதோ, அதே மாதிரி தமிழ்நாட்டுக்கு சென்னை நிதித் தலைநகராகவும், திருச்சியை நிர்வாக ரீதியான இரண்டாவது தலைநகராகவும் கொண்டு வர வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தேன்.
காலஞ்சென்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் அன்றைக்கு இதேபோன்ற ஒரு கோரிக்கையை வைத்தார். திருச்சியைத் தலைநகராகக் கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்னபோது, அவரைக் கேலியும், கிண்டல் செய்தும் பேசினார்கள். ஆனால், அவர் ஒரு தீர்க்கதரிசியாக அந்தக் கருத்தை முன்வைத்தார். ஏனென்றால், இன்றைக்கு, சென்னையைப் பொறுத்தவரைக்கும் வருடம் ஆக ஆக மக்கள் அங்கு இருக்க முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மட்டும் கிடையாது. சாதாரண வீட்டை வாங்க முடியாது; ஒரு அபார்ட்மென்ட் வாங்க முடியாத அளவுக்கு இன்றைக்கு விலைகள் உயர்ந்துவிட்டன.
இன்றைக்கு திருச்சியை ஒரு மாற்றுத் தலைநகராக, இரண்டாவது தலைநகராகக் கொண்டு வந்து, தலைமைச் செயலகம் போன்றவற்றை அங்கு கொண்டு வரும்போது, முதலில் நீங்கள் சென்னையை நெரிசல் குறைந்த நகரமாக மாற்றுகிறீர்கள். அங்கு இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் கன்னியாகுமரியாக இருக்கட்டும், கொங்கு மண்டலமாக இருக்கட்டும், எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும், மூன்று முதல் மூன்றரை மணி நேரத்தில் திருச்சிக்கு வந்துவிடலாம். சாமானியர்களுக்கு அவர்களுடைய அரசியல் தேவைகளாக இருக்கட்டும், நிர்வாகப் பிரச்சனைகளாக இருக்கட்டும், எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், திருச்சியை இரண்டாவது தலைநகரமாகக் கொண்டு வந்து, தலைமைச் செயலகம் உள்ளிட்ட நிர்வாக அமைப்புகளை அங்கு கொண்டு வரும்போது, அது சாமானிய மக்களுக்கு நல்லதாக இருக்கும்; தமிழ்நாட்டுக்கும் நல்லதாக இருக்கும்.
மத்திய தமிழ்நாடு, சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் என்று சொல்லக்கூடிய மத்திய மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே, அன்றைக்கு முதலமைச்சரிடம் நான் இதைச் சொன்னேன். இன்றைக்கும் நான் சொல்வது என்னவென்றால், தலைமைச் செயலகத்தைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் அதை திருச்சிக்கு கொண்டு வாருங்கள். திருச்சிக்கு கொண்டு வருவது திருச்சிக்கு மட்டும் கிடையாது; மத்திய மாவட்டங்களுக்கும் நல்லது, சென்னைக்கும் நல்லது. சென்னையை ‘டீகன்ஜஸ்ட்’ செய்து, சென்னையில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மூன்றரை மணி நேரத்திற்குள் திருச்சிக்கு வந்துவிடலாம்.
தமிழ்நாட்டின் மையப் பகுதியில் திருச்சி அமைந்திருப்பதால்தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் என்ன நினைத்தாரோ, அதே எண்ணத்தை முன்னெடுத்து, நீங்கள் 2ஆம் புரட்சித்தலைவர் எனவே நீங்கள் இரண்டாவது தலைநகரை உருவாக்கித் தர வேண்டும்.”எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)