கரடுமுரடான பாதையில் ஜீப் பயணம் மகிழ்ச்சி தரும் பட்ல பெட்டா மலை
- நமது நிருபர் -: கர்நாடகாவின் மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, ஹாசன், குடகில் இந்த ஆண்டு எதிர்பார்த்த

கர்நாடகாவின் மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, ஹாசன், குடகில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு, மழை பெய்யவில்லை என்றாலும், மூன்று மாவட்டங்களிலும், மாலை நேரத்தில் மிதமான, சாரல் மழை பெய்கிறது. இதனால், இன்னமும் வனப்பகுதிகள், பசுமை போர்த்திய நிலையில் உள்ளன.
அதிலும் ஹாசனில் இருந்து மங்களூரு செல்லும் பாதையில், பிசிலே காட் வனப்பகுதி சாலை முழுக்க, முழுக்க பச்சை, பசலேன மாறி உள்ளது.
இந்த சாலையில் உள்ள பட்ல பெட்டா சுற்றுலா பயணியரின், சொர்க்க பூமியாக மாறி உள்ளது.
அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு டிரெக்கிங் செல்லலாம். அல்லது ஜீப்பிலும் செல்லலாம். இந்த பாதை முழுதும் கரடுமுடாக காட்சி அளிக்கிறது.
இரு பக்கமும் பசுமை, நடுவில் குலுங்கி, குலுங்கி செல்லும் ஜீப்பில் பயணிப்பது, புதிய அனுபவமாக இருக்கும்.
பயணம் 3 கி.மீ., தான் என்றாலும், அங்கு செல்ல 30 முதல், 40 நிமிடங்கள் ஆகின்றன. இந்த பாதையில் பயணிக்க ஏற்றவாறு, ஜீப்பை வடிவமைத்து வைத்து உள்ளனர்.
பைக்கில் நீண்ட துாரம் பயணம் செய்யும் பைக்கர்கள், கரடுமுடான சாலையில் பைக்கில் சென்று சாகசம் செய்கின்றனர்.
ஜீப்பில் இருந்து இறங்கி பார்க்கும் போது, கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பசுமை மட்டுமே, கண் முன் நிற்கும். சில்லென வீசும் காற்றும், பசுமையின் மணமும் சுற்றுலா பயணியர் மனதை மயங்குகின்றன.
பசுமை போர்த்திய இடத்தில் நின்று புகைப்படம் எடுத்து, சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த இடத்திற்கு தனியாக செல்வதை விட, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது புதிய அனுபவத்தையும், மறக்க முடியாத நிகழ்வுகளையும் கொடுக்கும்.
பட்ல பெட்டாவுக்கு செல்ல, நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. ஆனால், ஜீப் பயணத்திற்கு பணம் செலுத்த வேண்டும். கட்டணம் சீசனுக்கு, சீசன் மாறுபடுகிறது. காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை செல்ல அனுமதி உள்ளது.