முதுமலை விலங்குகளின் தாகத்தை தீர்க்க அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு
ஊட்டி: முதுமலை வெளிவட்ட பகுதியில் உள்ள வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, காமராஜர் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
முதுமலை வெளி வட்ட பகுதியான, மாயார் , மசினகுடி , சிறியூர் வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசிப்பிடமாக கொண்டுள்ளது. ஆண்டுதோறும் வறட்சி சமயங்களில் காமராஜர் சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, வன விலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டில் கோடை மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்காக வனவிலங்குகள் நீரோடை பகுதிகளை தேடி செல்கிறது. வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க வனத்துறையினர், காமராஜர் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி மின்வாரியத்தை நாட உள்ளது.
காமராஜர் சாகர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பில் இருப்பதால் வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய விரைவில் அணை நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.