செப்.,12க்குள் ரோப்கார் பராமரிப்பு பணிகள் நிறைவு
பழநி:பழநி முருகன் கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் செப்.,12க்குள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணி ஜூலை 20 முதல் நடந்து வருகிறது. இதற்காக இயந்திரங்கள் அனைத்தும் என்.டி.டி., சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த முடிவின் அடிப்படையில் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரோப்கார், சாப்ட் பழுது கண்டறியப்பட்டு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாப்ட் கோல்கட்டாவில் இருந்து வாங்கப்பட்டது. செப்.,4ல் வந்தடைந்த நிலையில் நேற்று பரிசோதனை நடந்தது. கியர்பாக்ஸ் பொருத்தும் பணி முடிந்ததும் சோதனை ஓட்டம் நடக்கும். பின்னர் புதிய பெட்டி பொருத்தும் பணி துவங்கும்.
அதே நேரத்தில் ரோப்கார் கீழ் நிலையத்தில் பெருந்திட்ட வரைவின் படி கூரை பராமரிப்பு, பால்ஸ்சீலிங், பக்கவாட்டு சுவர்களில் கிரானைட் பதித்தல், அழகிய விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
செப்.,12க்குள் ரோப்கார் சேவையை மீண்டும் துவங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.