திறந்தவெளி கால்வாயால் குரோம்பேட்டையில் சீர்கேடு

குரோம்பேட்டை:குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லும் திறந்தவெளி கால்வாயால், கடும் துர்நாற்றம், கொசு, ஈ தொல்லை ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை மூடுகால்வாயாக மாற்ற வேண்டும்' என, குடியிருப்போர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையில் பழைய காவல் நிலையம் எதிரே தொடங்கும் கால்வாய், ரயில்வே பாதையை கடந்து, சாந்தி நகர், அம்மன் கோவில் தெரு, ராஜாஜி தெரு, நாயுடுஷாப் சாலை ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் சென்று, ஜி.ஜி.என்., பள்ளி பின்புறம் ரேடியல் சாலையை அடைகிறது.
நீர்வளத் துறைக்கு சொந்தமான இந்த கால்வாய், தற்போது முழுதும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. வணிக வளாகங்கள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக இதில் கலக்கிறது. கால்வாய் தொடங்கும் பகுதியில் 10 அடி, சில இடங்களில் 6 அடி என அகலம் மாறுபடும் நிலையில், சாந்தி நகரில் 16 அடி அகலம் உள்ளது.
கழிவுநீர் தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு, ஈ தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது.
எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் நலன் கருதி, திறந்த நிலையில் உள்ள கால்வாயின் மேற்பகுதியில் கான்கிரீட் சிலாப்கள் அமைத்து, மூடுகால்வாயாக மாற்ற வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.