ரூ.7 கோடி மதிப்புள்ள கஞ்சா திமிங்கில எச்சம் பதுக்கிய மூவர் கைது

சென்னை: வீட்டில், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட திமிங்கில எச்சம் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்த, மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
தமிழக காவல் துறையில், புதிதாக போதை பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படையில் உள்ள போலீசாருக்கு, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், சென்னை, பாண்டிபஜார் வழியாக, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட உள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாண்டி பஜார் காவல் நிலைய போலீசாருடன் இணைந்து, நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் சென்ற, கமலக்கண்ணன், 34, என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
தொடர் விசாரணையில், அவர், சென்னை நெற்குன்றத்தில் உள்ள தன் வீட்டில், ஒன்பது கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை வீட்டிற்கு அழைத்து சென்று, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர் அளித்த தகவலின்படி, தடை செய்யப்பட்ட, 5 கிலோ திமிங்கில எச்சம் பதுக்கி வைத்திருந்த, கமலக்கண்ணனின் கூட்டாளிகளான, அசோக்குமார், 40, செல்லதுரை, 38, ஆகியோரும் சிக்கினர். அவர்களிடம் இருந்து மொத்தம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் திமிங்கில எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா பதுக்கி வைத்திருந்த கமலக்கண்ணன், பாண்டிபஜார் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார். அசோக்குமார், செல்லதுரை ஆகியோர், வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் கைது செய்யப் பட்டனர்.
கடல் திமிங்கிலங்களின் செரிமான உறுப்பில் இருந்து, வாய் வழியாக வெளியேறும் எச்சம், 'அம்பர்கிரீஸ்' என அழைக்கப்படுகிறது. இது, மருந்து மற்றும் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப் படுகிறது.
இதை வைத்திருப்பது, வனத்துறை சட்டபடி குற்றம். இதனால், அசோக்குமார் மற்றும் செல்லதுரை, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.