Politics
அழகாகும் தெரு சுவர்கள்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில், தெரு சுவர்களை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் நகரின் அழகை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தெருச்சுவர் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி 5-வது வார்டு, சுப்பிரமணியர் கோவில் அருகில் உள்ள தெருச்சுவரில் வண்ணமயமான ஓவியங்கள் வரையும் பணி துவங்கபட்டுள்ளது. இப்பணியை, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா வழிகாட்டுதலின் பேரில், சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் ஒருங்கிணைப்பில், நகராட்சி மேற்பார்வையாளர்கள் மற்றும் அனிமேட்டர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சுவர் ஓவியங்கள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.