Politics
ரூ.279 கோடியில் 8 பணிகள் திட்டமின்றி கைவிட்ட அரசு: சி.ஏ.ஜி., அறிக்கையில் தகவல்
சென்னை:மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 279 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு பணிகள் கைவிடப்பட்டதாக, சி.ஏ.ஜி., எனும் மத்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 48 பணிகள் முன்மொழியப்பட்டன. எனினும், முறையான திட்டமிடல் இல்லாததால், 279.03 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
முதன்மை வினியோக துணை மின் நிலையங்களில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில், 'மைக்ரோ கிரிட்' மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. 3.60 கோடி ரூபாய் மதிப்பிலான பம்ப் நிலையங்களின் பெருக்கம், 8.89 கோடி ரூபாயில் புவியியல் தகவல் முறைமையை பயன்படுத்தி அனைத்து பயன்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் அமைப்பு, 4.20 கோடி ரூபாய் மதிப்பிலான மின் கழிப்பறைகள் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், 6.20 கோடி ரூபாய் மதிப்பில் மின் ரிக்ஷாக்களுக்கு சூரிய சக்தி சார்ஜ்ஜிங் நிலையங்கள், 248.47 கோடி ரூபாயில் தெருவிளக்கு கண்காணிப்பு அமைப்பு, 6.87 கோடி ரூபாயில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தெருவிளக்குகளை இயக்கி அணைக்கும், தானியங்கி அமைப்பு ஆகியவையும் செயல்படுத்தப்படவில்லை.
மேலும், இந்த பணிகள் கைவிடப்பட்டது தொடர்பாக, தமிழக அரசு அளித்த விளக்கமும் ஏற்புடையதாக இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.