Arts, culture, entertainment and media
அமைதி, ஒருமைப்பாட்டுக்காக வந்துள்ளோம்; மோகன் பாகவத் லண்டன் பயணம் குறித்து ஆர்.எஸ்.எஸ்., கருத்து

லண்டன்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் லண்டன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள, 20 சமூக அமைப்புகள் மேயர் சாதிக் கானுக்கு கடிதம் எழுதிய நிலையில், 'நாங்கள் அமைதி, ஒருமைப்பாட்டுக்காக வந்துள்ளோம்' என, ஆர்.எஸ்.எஸ்., பதிலளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழாவையொட்டி, மூன்று நாடுகளுக்கு மோகன் பாகவத் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா, கனடா சென்ற நிலையில், கடந்த 2 முதல் பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.
லண்டனில் மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கு பிரிட்டன் - இந்திய முஸ்லிம் கவுன்சில், தெற்காசிய ஒற்றுமை குழு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'மோகன் பாகவத்தின் நிகழ்ச்சிக்கு அரங்கம் வழங்கக்கூடாது' என, லண்டன் மேயருக்கு அந்த அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.
இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., ஊடக பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் கூறியதாவது:ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பது இயல்பானது. வெவ்வேறு குரல்கள் எழுப்பப்படுவதும் இயல்பானதே. நாங்கள் அமைதி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்காக இங்கு வந்துள்ளோம்.
அனைவருடனும் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். நாங்கள் யார், எதை சிந்திக்கிறோம், எப்படி சிந்திக்கிறோம், எங்களுடைய உலகப் பார்வை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவே வந்துள்ளோம். மறைப்பதற்கு எதுவும் இல்லை. கருத்து பரிமாற்றத்தையும் விவாதத்தையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.