கச்சா எண்ணெய் தடையின்றி கிடைக்க சூப்பர் பிளான்: இந்தியாவிற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் ஓமன்!

புதுடில்லி: ஈரான் - அமெரிக்கா மோதல் காரணமாக, ஹார்முஸ் வழிப்பாதையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு கைகொடுக்கும் வகையில், தனது நாட்டின் முக்கிய துறைமுகமான 'சோஹர் துறைமுகத்தில்' முதலீடு செய்யுமாறு இந்தியாவிற்கு ஓமன் நாடு நேரடி அழைப்பு விடுத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு வரப்படும் பிரதான கடல் வழியாக ஹார்முஸ் உள்ளது. ஆனால் போர் பதற்றத்தால் இப்பாதை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பதற்றமான பகுதிக்கு வெளியே, ஓமன் வளைகுடா கடற்கரையில் அமைந்திருக்கும் சோஹர் துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொண்டால், எந்தவித தடையுமின்றி கச்சா எண்ணெய்யை இந்தியா கொண்டு செல்ல முடியும் என ஓமன் அரசு தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் புதுடில்லியில் ஓமன் தூதரகம் சார்பில் இரண்டு நாள் தொழில் முதலீட்டு மாநாடு நடைபெற்றது. இதில் சோஹர் பிரீசோன் தலைமை செயல் அதிகாரியும், துறைமுக துணைத் தலைவருமான ராயித் அல் ருபாயி மற்றும் ஓமன் தூதர் இசா சலே அல் ஷிபானி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது ராயித் அல் ருபாயி கூறியதாவது: 'சோஹர் துறைமுகத்தில் ஏற்கனவே 30 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.2.5 லட்சம் கோடி) அதிகமாக முதலீடுகள் குவிந்துள்ளன. ஆண்டுக்கு 7.2 கோடி டன் சரக்குகளைக் கையாளும் பிரம்மாண்ட கட்டமைப்பு இங்கு உள்ளது. இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு கால்பதித்துள்ளன. மேலும் புதிய முதலீடுகளைச் செய்து, வளைகுடா மற்றும் உலகளாவிய சந்தைகளை இணைக்கும் இந்த வாய்ப்பை இந்தியத் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவிற்கு என்ன லாபம்?
சோஹர் துறைமுகம் விரைவில் ஓமன் - யுஏஇ ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட உள்ளது. இதனால் அமீரகத்தின் முக்கிய பகுதிகளுக்கு தரைவழியாக சரக்குகளை எளிதில் கொண்டு செல்ல முடியும். யுஏஇ மற்றும் கிழக்கு சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய்களுக்கு மிக அருகில் சோஹர் துறைமுகம் அமைந்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவுக்கு துகம் மற்றும் சலாலா துறைமுகங்களை ஓமன் வழங்கியிருந்தாலும், சோஹர் துறைமுகம் அமைந்துள்ள புவியியல் அமைப்பு, இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பான மாற்றாக அமையும் என சர்வதேச புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.