Politics
நியூஸ் பாக்ஸ்!
இத்தனை ஆண்டுக்காலமாக காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமே புதர்மண்டித்தான் கிடக்கிறது. புதரைக்கூடச் செதுக்காதவர், தொகுதியைச் செதுக்கியதாகக் கட்டுக்கதை விடுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. | news box september 09 2026

சாபம்விட்ட தி.மு.க... கலாய்த்துத் தள்ளிய த.வெ.க!
வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.பாரதி, ``காட்பாடியை அங்குலம் அங்குலமாகச் செதுக்கியவர் துரைமுருகன் என்பதை வாய் உள்ளவன், சோறு தின்பவன் எவனாலும் மறுக்க முடியாது. காட்பாடி மக்கள் துரைமுருகனின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு `காவல் தெய்வமே நீதான் எங்களைக் காப்பாத்தணும்’ என்று கெஞ்சும் நாள் வரும். என் ரத்தம் கொதிக்கிறது’’ என்று சாபம்விட்டு, முதலமைச்சர் விஜய் குறித்தும் இரட்டை அர்த்தத்தில் கடுமையாகச் சாடிப் பேசியிருந்தார். இந்தப் பேச்சால் கொதித்துப்போன த.வெ.க-வினர், ``மணல் கொள்ளை தொடங்கி காட்பாடியில் திரும்பிய பக்கமெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் துரைமுருகன். இப்படி 50 வருடங்களாக மக்களை ஏமாற்றியதால்தான் துரைமுருகனைத் தூக்கியெறிந்துவிட்டார்கள் மக்கள். இத்தனை ஆண்டுக்காலமாக காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமே புதர்மண்டித்தான் கிடக்கிறது. புதரைக்கூடச் செதுக்காதவர், தொகுதியைச் செதுக்கியதாகக் கட்டுக்கதை விடுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. நாவடக்கத்தோடு போய் ஓய்வெடுங்கள்’’ என்று பதிலடி தந்து கலாய்ப்பதால், துரைமுருகன் தரப்பு என்ன செய்வது எனப் புரியாமல் தவிக்கிறது.
“இதுவரை எம்.ஆர்.கே-வுக்காக உழைத்தோம்... இனி அவருடைய மகனுக்காகவா?”
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்துவிட்ட நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறார் அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின். மாற்றத்தின் ஒரு பகுதியாக, கட்சியில் இருந்த 77 மாவட்டங்களை 110-ஆக அதிகரித்ததுடன், விரைவில் புதிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகளையும் அறிவிக்கவிருக்கிறார். இதன்படி கடலூர் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அமைப்புத் தேர்தலைப் பார்வையிடுவதற்காக கலாநிதி வீராசாமி எம்.பி-யும், பரிதி இளம் சுருதியும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதேசமயம், தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினரும், கிள்ளை பேரூராட்சியின் துணைத் தலைவருமான கிள்ளை ரவீந்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், `கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்’ என்று பதிவிட்டு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ``40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியில் இருக்கிறேன். ஆனால், எந்தவித அங்கீகாரமும் இல்லை. மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மீது கொடுத்த புகாரைக்கூடத் தலைமை இதுவரை விசாரிக்கவில்லை என்றால், எதற்கு இந்தக் கட்சியில் தொடர வேண்டும்... இத்தனை காலம் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்காக உழைத்தோம். இனிமேல் அவரின் மகன் எம்.எல்.ஏ-வாகி, அமைச்சராக உழைக்க வேண்டுமா... குறைந்தபட்ச ஜனநாயகம்கூட இல்லாத இந்தக் கட்சியில் இனியும் பயணிப்பது பயனற்றது” என்றார் விரக்தியாக.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தவறாமல் கலந்துகொள்வார். விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதிலிருந்து, அவர் திரும்பச் செல்லும் வரை எஸ்.பி.வேலுமணி உடனிருப்பார். ஆனால், அண்மையில் த.வெ.க ஆதரவு நிலைப்பாட்டால் தனி அணியாகப் பிரிந்து செயல்பட்டு, பின்னர் அ.தி.மு.க-வுடனேயே ஒன்று சேர்ந்துவிட்டாலும்கூட எடப்பாடி பழனிச்சாமி அணியினருடன் இணையாமல் தனித்தே செயல்பட்டு வருகிறார் எஸ்.பி.வேலுமணி. இதேபோல, எடப்பாடி பழனிச்சாமி கோவைக்கு வரும்போது வரவேற்க மற்ற அனைத்து நிர்வாகிகள் சென்றாலும், எஸ்.பி.வேலுமணி வரவேற்கச் செல்வதில்லை. கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே நிற்கிறார்!
அரசு நிகழ்ச்சி... வெளியூர் பயணம்... முதல்வர் ஆர்வம் ஏன்?
‘அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூருக்குச் செல்லலாம்’ என்று சொன்னால், ‘அதெல்லாம் தேவையில்லை. நான் எந்த ஊருக்குச் சென்றாலும், மக்கள் ஏராளமாகக் கூடுவார்கள். அதனால், பல வழிகளிலும் பொதுமக்களுக்குத்தான் இடைஞ்சல் ஏற்படும்’ என்று சொல்லி வெளியூர் பயணத்தைத் தவிர்த்துவந்த முதல்வர் விஜய், தற்போது வெளியூருக்குச் செல்ல ஆர்வப்படுகிறார். ஏன் திடீர் மாற்றம்... என்று விசாரித்தால், ‘அரசு நிர்வாகத்தை முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவும் கருணாநிதியும் எப்படி மேற்கொண்டார்கள்?’ எனச் சமீபத்தில், அரசு அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதானாம்.
அதிகாரிகள் சிலர் முதல்வரிடம், ‘‘ஜெயலலிதா வெளியூருக்குச் சென்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்ப்பார். ஆனால், கருணாநிதி விரும்புவார். ஒருமுறை இது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, ‘அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூருக்குச் செல்லும்போது, மக்களோடு மக்களாகக் கலந்து இருக்க வாய்ப்பு கிட்டுகிறது. ஒரு அரசியல் தலைவர், எந்தக் காரணத்துக்காகவும் மக்களிடமிருந்து விலகிச் சென்றுவிடக் கூடாது’ எனச் சொல்லுவார்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதையடுத்தே, கருணாநிதி பாணியில் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் பயணத்தில் ஆர்வம் காட்டுகிறாராம் முதல்வர் விஜய்.
