வளர்ச்சி திட்டப் பணி கலெக்டர் ஆய்வு
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு செய்தார்.
அரகண்டநல்லுார் அடுத்த நாயனுாரில் 29.50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள சிட்கோ தொழிற்பேட்டையை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு செய்தார். தொழிற்பேட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், முனைவோர்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள மின்சார வாரியம் மற்றும் சிட்கோ கிளை மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அரகண்டநல்லுாரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்து, தரமாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
அதேபோல் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி சமூக நீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். விடுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், தொடர்ந்து பராமரிப்பு பணிகளை செய்து, விடுதியை சுகாதாரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.
மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார் சாருமதி, முகையூர் பி.டி.ஓ., சையதுமுகமது, ஜெகன்நாதன், ஊரக வளர்ச்சி துறை பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.