Lifestyle and human interest
பண்ருட்டி கொலை வழக்கு: பெண் உட்பட 5 பேர் கைது
பண்ருட்டி: பண்ருட்டி அருகே சண்டையை விலக்கிவிட்டவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும்: பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது குடும்பத்திற்கும், கீழ்கவரப்பட்டில் வசிக்கும் இவரது அக்கா கன்னியாகுமரி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
நேற்றுமுன்தினம் கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு விநாயகர் சிலை கரைக்க சென்ற விக்னேஷ் மற்றும் கன்னியாகுமரி மகன் தேவ் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மாலை வீடு திரும்பியதும் விக்னேஷ் தந்தை உள்ளிட்ட 5பேரை அழைத்து சென்று கீழ்கவரப்பட்டில் உள்ள தனது அத்தை வீட்டில் நியாயம் கேட்டார். இதில் இருகுடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறை விலக்கிவிட வந்த கீழ்கவரப்பட்டு சேர்ந்த கண்ணன் மகன் ராமு,45; விக்னேஷ், அவரது தந்தை மூர்த்தி உள்ளிட்டோர் தாக்கினர். அதில், மயக்கமடைந்த ராமுவை, அங்கிருந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து ராமு மனைவி வள்ளி,38; அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து மேல்கவரப்பட்டை சேர்ந்த விக்னேஷ்,24; அவரது தந்தை மூர்த்தி,45; தாய் அம்பிகா,42; சிவா,24; அப்துல்பாசித்தான்,24; ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவான முருகன் மகன் விக்னேஷ், ஸ்ரீதர் ஆகியோரை தேடிவருகின்றனர்.