Politics
காங்., மறுசீரமைப்பு கூட்டத்தில் மோதல்: திட்டக்குடியில் பரபரப்பு
திட்டக்குடி, செப். 12– திட்டக்குடியில் காங்., மேற்கு மாவட்ட மறுசீரமைப்பு கூட்டத்தில், கோஷ்டி மோதல்
திட்டக்குடியில் காங்., மேற்கு மாவட்ட மறுசீரமைப்பு கூட்டத்தில், கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் லாவண்யா தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட மேலிட பொறுப்பாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். இதில், திட்டக்குடி நகரம், மங்களூர், நல்லுார் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி, நகர தலைவர், வட்டார தலைவர், மண்டல தலைவர் பதவிகளுக்கு நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு, நேர்காணல் நடந்து கொண்டிருந்தது.
அப்போது, நிர்வாகி சீனிவாசன், விஷ்ணுபிரசாத் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என பேசினார். அதனை, இளைஞர் காங்., மேற்கு மாவட்ட பொது செயலாளர் ராகுல்காந்தி கண்டிக்கவே இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக பிரிந்து முன்னாள் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் லாவண்யா ஆகியோர் முன்னிலையில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
காயமடைந்த ராகுல்காந்தியை சக நிர்வாகிகள் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து திட்டக்குடி போலீசார் விசாரித்தனர். காங்., கட்சியினரிடம் இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.