காஷ்மீர் பண்டிட் ஊழியர்களுக்கு லஷ்கர் கொலை மிரட்டல்
ஸ்ரீநகர், செப். 12– பிரதமர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், ஜம்மு – காஷ்மீரில் பணியாற்றும் காஷ்மீர் பண்டிட் அரசு
பிரதமர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், ஜம்மு – காஷ்மீரில் பணியாற்றும் காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர்களுக்கு லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
காஷ்மீர் பண்டிட்களை மறுகுடியமர்த்தும் பிரதமரின் திட்டத்தின் கீழ், 6,000 பண்டிட்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களுக்கு தற்காலிக தங்குமிட வசதி அளிக்க கோரி, ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தனி இடத்தில் பண்டிட்களை குடியமர்த்த முடிவு செய்துள்ள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, லஷ்கர் – இ – தொய்பாவின் துணை அமைப்பான ஐக்கிய விடுதலை கவுன்சில் நேற்று மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த அமைப்பு, கடந்த மாதம் முதல் ஐந்து மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளது.
கடிதத்தில், ‘புலம் பெயர்ந்த பண்டிட்களுக்கு தனி குடியிருப்பு வழங்குவது, மாநிலத்திற்குள் மற்றொரு மாநிலத்தை உருவாக்கும் திட்டமிட்ட சதி. குடியமர்த்த திட்டமிட்டுள்ள, 6,000 பண்டிட்களின் விபரங்கள் எங்களிடம் உள்ளன. அவர்கள் குடியிருப்புகளில் தங்கினால் தாக்குவோம்’ என, கூறப்பட்டுள்ளது.