‘ஆர்த்தி’யில் ஏழை நோயாளிகளுக்கு இலவச எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை – எளிய மக்களுக்கு, இலவசமாக எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வழங்கும் புதிய திட்டத்தை ‘ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது
இது குறித்து, ஆர்த்தி ஸ்கேன்ஸ் ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் பிரசன்னா விக்னேஷ் கூறியதாவது:
ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ், நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை நிறுவனமாக உள்ளது.
இதில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவச எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை அளிக்க உள்ளது.
நிதி சுமையின்றி அனைவருக்கும் மருத்துவ கண்டறிதல் சேவைகள் கிடைக்க, இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் அரசு பரிந்துரை சீட்டு காண்பித்து, இங்கு பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும், நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் தேவை என்பதை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் கடிதம் காண்பிக்கலாம்.
அத்துடன், ‘நோயாளிக்கு ஸ்கேன் எடுப்பது அவசியமானது, குறைந்தபட்ச கட்டணத்தை கூட செலுத்த முடியாது’ என, ஆர்த்தி ஸ்கேன்ஸ் ஊழியர் வழங்கும் பரிந்துரை வாயிலாகவும், இப்பரிசோதனை செய்யப்படும்.
சென்னையில் முதற்கட்டமாக கீழ்ப்பாக்கம் ஆர்த்தி ஸ்கேன்ஸ் ஆய்வகத்தில், இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.