Lifestyle and human interest
5 நிமிடத்தில் இந்தியர்கள் 80 பேரை வேலை நீக்கம் செய்த அமெரிக்க வங்கி

வாஷிங்டன்: 5 நிமிடம் நடந்த கூகுள் அழைப்பு(GOOGLE MEET) வாயிலாக இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் 80 பேரை அமெரிக்க வங்கி ஒன்று பணியில் இருந்து நீக்கி உள்ளது.
அமெரிக்காவில் சிறுவணிகங்களுக்கு சேவை வழங்கும் புளுவைன் என்ற டிஜிட்டல் வங்கியில் இருந்து தான் இந்திய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் சமூக வலைதளப்பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது:
அமெரிக்க வங்கி ஒன்றில் நேற்று வரை வாடிக்கையாளர் சேவை குழுவில் பணியாற்றி வந்தேன். செயல்பாட்டு காரணங்களுக்காக எங்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி கேட்டுக் கொண்டனர். மாலை 6:30மணி ஷிப்டில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன். இரவு 9:30 மணிக்கு கூகுள் அழைப்பு(google Meet) வாயிலாக அழைப்பு வந்தது.
அப்போது, வாடிக்கையாளர் சேவை குழுவில் பணியாற்றிய இந்தியர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தனர். 80 ஊழியர்களின் பணி போய்விட்டது. 5 நிமிட அழைப்பில் 80 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் நம்மை வெளியேற்றக்கூடிய இந்த பெரு நிறுவனங்களுக்காக நாம் வேலை செய்தோம் என்பதை நினைத்து வருத்தமாக உள்ளது. ஒரு காலத்தில் என் வேலையில் கடினமாக உழைத்ததற்காக நான் வருந்துகிறேன்.
இந்திய குழுவினரிடம் இருந்து எதிர்பார்த்த செயல்திறன் கிடைக்கவில்லை என்றனர். இது சுத்தப்பொய். ஏனென்றால், அமெரிக்க குழுவினரில் தான் அதிகப்படியான ஊழியர்கள் வெளியேறுவார்கள். விருப்பப்படி நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். அவர்களால் எதையும் சரியாக செய்யவே முடியாது. ஆனால் நாங்களோ வேலை பாதுகாப்பு என்ற பெயரில் எங்களை எப்போதும் வருத்திக் கொள்வோம். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
இந்தப்பதிவு சமூக ஊடகத்தில் வைரலானதும், அந்த ஊழியர்களுக்காக பலர் கவலை தெரிவித்துள்ளனர். இது ஒரு வருத்தமான மற்றும் மனம் நொந்து போகச் செய்யும் நிகழ்வுஎனத் தெரிவித்து வருகின்றனர்.