Politics
““பாரதிக்கு உரிய இடம் இன்னும் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை” - குடியரசுத் துணைத்தலைவர் வேதனை!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100வது ஆண்டைக் குறிக்கும் வகையில், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும் பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் எழுதிய "ஏ செஞ்சுரி ஆஃப் சர்வீஸ்" (A Century of Service) புத்தக வெளியீட்டு விழா புதுடெல்லியில் இன்று (15.09.2026) நடைபெற்றது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், “முரசொலியைப் படிக்கின்றவர்களுக்கு ஒரு வரி மறக்க முடியாது என்று நான் கருதுகிறேன்.
‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ ஆகும். நாம் இருக்கிறோம்; நாம் மறைந்து போவோம். ஆனால் புத்தக வடிவிலே வராத, எழுத்து வடிவிலே வராத நற்செயல்கள் எல்லாம் மண்ணுக்குள்ளாக மறைந்துதான் போகும். அதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் கலைஞர். அதனால்தான் அவருடைய பொது வாழ்க்கையையே அவர் கையெழுத்துப் பிரதியிலே தொடங்கி, என்றைக்கும் முரசொலியை நிறுத்தாமல் நடத்தினார். அதைப் படிக்கின்றவன் என்ன நினைப்பான்? அதிலே வருகின்ற செய்திகள் மட்டும்தான் வரலாறு என்று நினைப்பான். தமிழிசை சௌந்தரராஜனுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
நீங்களாவது நல்லவைகளை எல்லாம் எழுத்திலே கொண்டு வந்தீர்களே; அதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். பாரதி மிக அழகாகப் பாடுகிறான், ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே, அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே. இதை வந்தனை கூறி மனதில் இருத்தி, என் வாயுற வாழ்த்தேனோ?. இதை வந்தேமாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ’ என்று சொல்லுகிறார்.
இதைவிட இந்த தேசத்தினுடைய உணர்வுகளை எல்லாம் தமிழிலே சில வரிகளிலே ஒருவனால் கொட்டித் தீர்க்க முடியுமா என்றால், முடியாது. ஆனால் அந்த பாரதிக்குக் கூட உரிய இடம் இன்னும் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரியது. இந்தப் பாடலின் உணர்வைச் சேவையாக மாற்றும் பணியை ஆர்.எஸ்.எஸ். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து செய்து வருகிறது. அப்படிச் செய்வதற்கு அடிப்படையாக சுய சேவகர்கள் இருக்கிறார்கள்” எனத் தொடர்ந்து பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)