Politics
மாவலி பதில்கள்

இந்தியா தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கியே இருப்பது எதனால்?
அடித்தட்டு மக்களுக்கல்ல... பணக்காரனுக்கு சலுகை கொடு. அப்போதுதான் எல்லோரும் பணக்காரனாக முயற்சிப்பான். நாடு வளமாகும் என யோசிக்கும் நாடு அமெரிக்கா. மோடி வந்தபிறகு கிட்டத்தட்ட அதேவழியில் இந்தியாவின் பொருளாதாரச் சிந்தனையும் இருக்கிறது. ஆனால் அந்த யுக்தி, அம்பானி, அதானியைத் தவிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவுக்குப் பலனளிக்க மறுக்கிறது.
இன்றைய காலத்துக்கேற்ப நவீன வசதிகளுடன் ஒரு புதிய தலைமைச் செயலகம் தேவைதானே?
தேவையென்றே வைத்துக்கொள்வோம். இன்றைய முதல்வர் தனக்கு வசதியாக தன் தங்குமிடத்துக்குப் பக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டினால், நாளைய முதல்வர் தலைமைச் செயலகம் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பது வசதி என நினைக்கமாட்டாரா?
பஞ்ச் டயலாக் பேச 3 நாட்கள் ரிகர்சல் எடுத்து சட்டசபைக்கு பேசவருகிறார் விஜய் என்று செல்லூர் ராஜு விமர்சனம் செய்கிறாரே?
செல்லூர் ராஜு சொல்வதுகூட பொருத்தமில்லை. விஜய் மற்றும் த.வெ.க.வினரின் சட்டமன்ற உரையில் பஞ்ச் டயலாக்கைவிட அவதூறுகள்தான் அதிகமிருக்கிறது. அவதூறு செய்வதற்கான பயிற்சியெடுத்தார் எனச் சொல்லலாம்.
கட்சி, பத்திரிகை எதை நடத்துவது கடினம்?
இரண்டுமே கடினம்தான். சமூக வலைத்தளங்கள், தொலைக் காட்சி ஊடகங்கள் இவற்றுக்கு நடுவில் பாரம்பரிய அச்சு ஊடகப் பத்திரிகை நடத்துவதுதான் இன்று மிக மிகக் கடினம்.
காக்ரோச் கட்சி பிளவுபட்டுவிட்டதே?
அப்படி நடக்கவில்லையென்றால்தான் ஆச்சரியம். ஆளுங்கட்சியின் சிண்டைப் பிடித்து ஆட்டுமளவுக்கு வலுவானதாக இருக்கிறது அமைப்பு. ஜந்தர்மந்தர் போராட்டத்தில் பங்கேற்ற அடித்தளத் தொண்டர்களுக்கு கட்சியின் புதிய அமைப்பில் போதிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் மணீஷ் பிரம்மபட். அதேபோல ராகுல் பாண்ட்யா என்பவரும் விலகியுள்ளார். இருவருமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஆக, சி.ஜே.பி. சிதறவேண்டுமென யாரோ வேலை பார்ப்பது தெளிவாகிறது.
உலகிலுள்ள சண்டைகளுக்கும் பிரிவினைகளுக்கும் கிருஷ்ணபக்தி வழியில் தீர்வுகாணலாம் என மோகன்பகவத் கூறுகிறாரே?
உலகை விடுங்கள். இந்தியாவை மட்டும் எடுப்போம். இப்போது ஆட்சியிலிருப்பவர்கள், மோகன் பகவத் கோரிக்கை வைத்தால் கேட்பவர்கள்தானே. இந்தியாவின் பிரச்சனைகளை யெல்லாம் கிருஷ்ண பக்தி வழியில் தீர்க்கவேண்டியதுதானே. மாறாக, காவி இயக்கம் முடிந்தளவு பிளவுகளையும் மோதல்களையும்தான் உருவாக்கிவருகிறதென இந்தியர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.
முதல்வரின் சட்டசபை பேச்சை தமிழிசை பாராட்டுகிறார், நயினார் நாகேந்திரன், முதல்வர் கூப்பாடு போடுவது அரசியல் அநாகரீகம் என்கிறாரே?
பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவது பா.ஜ.க.வின் இயல்புதான். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
2026-ல் நடந்தது மயக்கநிலை மாற்றம் என்கிறாரே அ.மலை?
கூடவே, 2027 அக்டோபருக்குள் ஒரு லட்சம் தலைவர்களை உருவாக்கி அறிவுநிலை மாற்றம் உருவாக்கப்போகிறாராம். கட்சிக்காரர்களை எல்லாம் ஜெராக்ஸ் தாள்போல் எந்திரத்தின் ஒருபக்கம் நுழைத்தால், மறுபக்கம் அறிவுநிலை மாற்றம் நிகழ்ந்து தலைவர்களாக வருவார்களோ என்னவோ!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)