Politics
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வெற்றி: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால், முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், அமைச்சர் சிவக்கொழுந்து, அரசு கொறடா ஆறுமுகம், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் வையாபுரி மணிகண்டன், மோகன்தாஸ், ரவிக்குமார், அய்யப்பன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் செல்வம், ஜான்குமார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், மாநில இணைச் செயலாளர் கணேசன், அன்பானந்தம், பாப்புசாமி, தமிழ், பா.ம.க., ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் மதியழகன், கணபதி கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் அசோக் ஆனந்தை அறிமுகப்படுத்தி முதலவர் ரங்கசாமி பேசியதாவது:
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில், அசோக் ஆனந்த் நிறுத்தப்படுகிறார். கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அவரை அதிக ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும். இது நம்முடைய ஆட்சியை பலப்படுதக்கூடிய தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல சாதனைகளை செய்து கொண்டு வருகிறது. மாநில வளர்ச்சிக்கு என்ன திட்டங்கள் தேவைபடுகிறதோ, அதை மத்திய அரசின் துணையோடு கொண்டு வர இந்த தேர்தல் வெற்றி வாய்ப்பு முக்கியமானது.
மாநில அந்தஸ்து குறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்துவோம். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாளை (இன்று) 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது' என்றார்.
