Sport
களத்திலிருந்து விடைபெற்ற கால்பந்து ரசிகர்களின் கடவுள்..!
கத்தாரில் 2022 உலகக் கோப்பையை அவர் ஏந்தியபோது, அத்தனை ஆண்டுகள் அவரைத் துரத்திக்கொண்டிருந்த அந்த ஒப்பீட்டுப் பேய் விலகி ஓடிப்போனது.

குட்பை லியோ..!
கால்பந்து உலகின் தன்னிகரில்லாத வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேசக் களத்திலிருந்து ஓய்வுபெற்றிருக்கிறார்.
2005-ம் ஆண்டு தொடங்கிய தன் பயணத்தில், உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா (Copa America ) பட்டங்கள், சில தொடர் நாயகன் விருதுகள், 200-க்கும் மேற்பட்ட போட்டிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கோல்கள் எனச் சாதனை மைல்கற்கள் பலவற்றைக் கடந்து வந்திருக்கிறார் மெஸ்ஸி. இந்தச் சாதனை மைல்கள், எதிர்காலப் புள்ளிவிவர நிபுணர்கள் அவரைப் பற்றிப் பேசுவதற்கு அவசியமாக இருக்கலாம். ஆனால், சமகாலத்தில் அவர் ஆட்டத்தைப் பார்த்து ரசித்த, சிலிர்த்துப்போன ரசிகர்களுக்கு அவை அவசியமற்றவை.
பந்து அவர் காலில் இருக்கும்போது எப்படியெல்லாம் நடனமாடியது, இயற்பியலின் விதிகளை அவர் எப்படியெல்லாம் ஏமாற்றினார், பந்தின் மீது கறுப்புத்துணி போடாமல், எந்த மந்திரமும் சொல்லாமல் நேரலையில் எப்படி மேஜிக்குகளை நிகழ்த்தினார் என்பவையே ரசிகர்கள் `மெஸ்ஸி’ எனும் பெயரைக் காலம் முழுவதும் உச்சரிப்பதற்குப் போதுமானவை.
இவ்வளவு ஏன், சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் 39 வயதிலும்கூட சிறந்த வீரருக்கான போட்டியில் இருக்கும் அளவுக்குக் கடைசிவரை கால்பந்து மைதானத்தில் சக்கரம் கட்டிச் சுழன்றிருக்கிறார் அவர்.
உலகின் பல்வேறு நாடுகளில் அர்ஜென்டினாவின் நீல, வெள்ளை ஜெர்ஸி காணப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார். அர்ஜென்டினாவின் ஒரு தலைமுறை கால்பந்தைத் தேர்ந்தெடுக்க முன்னுதாரணமாய் விளங்கியிருக்கிறார். அது மட்டுமா... அர்ஜென்டினா அணியின் சக வீரர்களே அவரை ‘கடவுள்’ என்று சொல்லும் அளவுக்கே இருந்திருக்கிறது மெஸ்ஸி அந்த தேசத்தில் ஏற்படுத்திய கால்பந்தின் தாக்கம்.
பலமுறை அவர் ஓய்வு பற்றிய கேள்விகள் எழுந்தாலும், அர்ஜென்டினா அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் இன்னும் சில காலம் அந்த ஜெர்ஸியை அணிந்து விளையாட வேண்டும் என்று அந்த நாட்டினர் விரும்பினார்கள். ஆனால், தற்போது தன் தந்தை இறந்து சில நாள்களே ஆன நிலையில் இந்த முடிவை அறிவித்திருக்கிறார் மெஸ்ஸி. ஓய்வை அறிவிப்பது இது இரண்டாவது முறை!
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ஜென்டினா மக்களின் ஆதர்சமாக விளங்கிய மெஸ்ஸியின் இந்த முடிவை அந்தத் தேசம் நெகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறது. தங்கள் கதாநாயகனுக்கு நன்றிகளை உரைத்துக் கொண்டிருக்கிறது. அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மெஸ்ஸி இந்த இடத்தைச் சாதாரணமாக அடைந்துவிடவில்லை.
அர்ஜென்டினா மக்கள் அவரை எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையைச் சொன்னால் அவருக்கு, சவால்கள் திறமையால் ஏற்படவில்லை. அது வரலாறு ஏற்படுத்திய சோதனை.
பெரும் திறமைகொண்ட வீரராக இருந்த போதிலும், இளம் வயதிலேயே ஒட்டுமொத்த உலகமும் இவரை ‘கடவுள்’ என்று ஏற்றுக் கொண்டிருந்தபோதிலும், அவரது சொந்த தேசம் அதை எளிதாக ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம், அங்கு ஏற்கெனவே ஒரு ‘கடவுள்’ இருந்தார். எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லாமல் ஒட்டுமொத்த தேசமுமே ஒற்றை உருவத்தை, சில தசாப்தங்களாக வழிபட்டுக் கொண்டிருந்தது... டியாகோ மரோடானா. அந்த மகத்தான ஜாம்பவானின் இடத்தை நிரப்பவேண்டிய பெரும் நெருக்கடி மெஸ்ஸிக்கு இருந்தது.
மரடோனாவைப்போல் அதே சிறிய உடல்வாகு, அதே மாதிரி பந்தைக் கடத்திச் செல்லும் லாகவம், அதே 10-ம் நம்பர் ஜெர்ஸி... ஒப்பீடுகள் ஆரம்ப காலம்தொட்டே தொடர்ந்துகொண்டிருந்தன. அதுவே அவருக்கான பிரச்னையாகவும் அமைந்துவிட்டது. ஏனெனில், மெஸ்ஸியால் மரடோனாவைப்போல் கோப்பைகளை வெல்ல முடியவில்லை.
மெஸ்ஸியின் சர்வதேச அறிமுகத்துக்குப் பிறகு, அடுத்த 16 ஆண்டுகள் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா என ஒவ்வொரு தொடரிலும் அர்ஜென்டினா தடுமாறியது. கோப்பைகளை வெல்லத் தவறியது. அது அந்த ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஏன், ஒருகட்டத்தில் மெஸ்ஸி விரக்தியில் ஓய்வு முடிவையேகூட அறிவிக்கும் நிலைக்குச் சென்றார்.
2014 ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோற்றது அர்ஜென்டினா, அடுத்த ஆண்டு நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலியிடம் தோல்வி. அதற்கடுத்த ஆண்டு நடந்த கோபா அமெரிக்கா ஃபைனலிலும் அதே முடிவு. 3 ஆண்டுகளில், 3 ஃபைனல் தோல்விகள். அப்போது மரடோனாவுடனான ஒப்பீடுகள் ஒருபக்கம், அதனால் ஏற்பட்ட விமர்சனங்கள் ஒருபக்கம்... மெஸ்ஸி கேள்விகளால் துளைக்கப்பட்டார். ஒருபக்கம் கிளப் கால்பந்தில் எந்த வீரரும் எட்டாத உயரத்தை எட்டி, வெற்றிகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்தவருக்கு, தான் பெரிதும் நேசித்த அர்ஜென்டினா ஜெர்ஸியே பாரமாக இருந்தது. அதனால் சர்வதேச கரியருக்கு 29 வயதிலேயே முற்றுப்புள்ளி வைக்கும் முடிவை எடுத்தார்.
“இதுதான் எல்லோருக்கும் நல்லது என்று நான் நினைக்கிறேன். முதலில் எனக்கும், பின்னர் இதை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கும்” என்று வலியோடு பேசியிருந்தார் மெஸ்ஸி. அந்த முடிவு கால்பந்து உலகையே அதிரவைத்தது.
பின்னர் மெஸ்ஸியின் ரசிகர்கள் ஒருபக்கம் ஊர்வலங்கள், ஆன்லைன் மனுக்கள் என்று போராட, மரடோனா, அர்ஜென்டினா அதிபர் போன்ற பெரும் ஆளுமைகளும் மெஸ்ஸியின் முடிவைப் பரிசீலிக்கச் சொல்லிக் கேட்க, சில நாள்களிலேயே தன் முடிவை மாற்றிக் கொண்டார் மெஸ்ஸி. ஆனாலும், அடுத்த ஏழு ஆண்டுகள் அதே சோகம்தான் தொடர்ந்தது. கோப்பைகள் எதுவும் இல்லை!
மெஸ்ஸியின் வாழ்க்கை பலருக்கும் கொண்டாட்டங்களைக் கொடுத்திருக்கும், உத்வேகம் கொடுத்திருக்கும். பலருக்குப் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கும். அவரது இந்த அர்ஜென்டினா கரியரின் பொன்னான பக்கங்கள் பல்வேறு விஷயங்களை உணர்த்தும். ஆனால், இந்த மோசமான பக்கங்களையும் சற்றுப் புரட்டிவிட்டுப் பார்க்கும்போது, அது ரூமியின் வாசகத்துக்கான ஒரு தற்காலிக உதாரணமாகவும் இருக்கும்... ‘நீ எதைத் தேடுகிறாயோ, அது உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது’.
சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றைக் கோப்பைக்காக காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அந்தத் தேடல் 2021-ல் முடிவுக்கு வந்தது. கோபா அமெரிக்காவை வென்று தன் முதல் சர்வதேச மகுடத்தைச் சூடினார் அவர். ஆனால், அது அதோடு நின்றுவிடவில்லை. 2022-ல் அத்தனை காலம் அர்ஜென்டினா எதிர்பார்த்திருந்த உலகக் கோப்பையையும் வென்றார். அந்தத் தொடரின் சிறந்த வீரராகவும் உருவெடுத்தார். 2024-ல் மீண்டும் கோபா அமெரிக்கா வெற்றி. தொடர்ந்து 3 இறுதிப் போட்டிகளில் தோற்று ஓய்வு அறிவித்தவர், அடுத்தடுத்து 3 ஆண்டுகளில், 3 இறுதிப் போட்டிகளை வென்று தன் தேசத்தைக் கோப்பைகளால் அலங்கரித்தார்.
கத்தாரில் 2022 உலகக் கோப்பையை அவர் ஏந்தியபோது, அத்தனை ஆண்டுகள் அவரைத் துரத்திக்கொண்டிருந்த அந்த ஒப்பீட்டுப் பேய் விலகி ஓடிப்போனது. ஏனெனில், அர்ஜென்டின மக்கள் மரடோனாவுக்கு மட்டுமே கொடுத்திருந்த அந்த அந்தஸ்தை மெஸ்ஸிக்கும் கொடுத்தார்கள். அதுவரை ஜாம்பவானாக மட்டுமே அவரைப் பார்த்தவர்கள், கடவுளாக, அல்லது கடவுளின் பிள்ளையாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அத்தனை ஆண்டுக்காலப் போராட்டத்தை வென்று அந்தக் கோப்பையோடு அவர் கண்ணீர் சிந்தியபோது அவர்களும் கண்ணீர் சிந்தினார்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் அவரது முதல் ஓய்வு முடிவு வெளிவந்திருந்த நிலையில், இன்று ஏகபோக வாழ்த்துகளுக்கும் நன்றிகளுக்கும் நடுவே இரண்டாவது ஓய்வு முடிவு வந்திருக்கிறது.
‘பிறக்கும்போதே கால்பந்து கடவுளால் அருளப்பட்டவர்’ என்று அவர் திறமையைப் பற்றிப் புகழ்வார்கள். அவரது கிளப் கால்பந்து கரியர் பெரும்பாலும் ஏறுமுகத்தை மட்டுமே கண்ட ஒன்று. ஆனால், அவரது இந்த அர்ஜென்டினா கரியர், ஏழு கடல்கள், ஏழு மலைகளைத் தாண்டி கிளியைத் தொடுவதைப் போன்ற ஒரு ஃபேன்டஸி கதை. கடவுள்களின் கதைகள் அப்படி இருந்தால்தானே முழுமை பெறுகின்றன!
