Economy, business and finance
உயரும் அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி இந்திய பத்திரங்களின் நிலை என்ன ஆகும்?

அமெரிக்க கடன் பத்திர சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உலகளாவிய நிதி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் 10 ஆண்டுகால அரசு கடன் பத்திரங்களின் வட்டி விகிதம், 5.03 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது, கடந்த 2007ம் ஆண்டிற்கு பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும்.
கடந்த 2016 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் சராசரியாக 2.70 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் அது 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
1 பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற பயம்
2 அமெரிக்க அரசின் கடன் அதிகரித்து வருவது
3 வங்கி வட்டி விகிதங்களை குறைக்க முடியாத சூழல்
4 கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் ஏற்படும் அதிர்வுகள்.
இந்நிலையில், இந்திய பங்கு மற்றும் கடன் பத்திர சந்தையில் இவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என 'கிரியேட்டிங் வெல்த்' நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் திடீரென உயர்ந்தது, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பங்கு சந்தைகளின் மதிப்பீடுகள் மீது கடும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
அரசு கடன் பத்திரங்களிலேயே ஆபத்தற்ற முறையில் 5 சதவீத நிலையான வருமானம் கிடைக்கும்போது, முதலீட்டாளர்கள் அதிக அபாயம் கொண்ட பங்கு சந்தையில் முதலீடு செய்ய தயங்குவார்கள்.
இதனால், ஈக்விட்டி சந்தையிலிருந்து முதலீடுகள் பத்திர சந்தையை நோக்கி நகர தொடங்கும் என்பதால், பங்கு சந்தைகளில் கணிசமான சரிவு அல்லது திருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்திய பங்கு சந்தையை பொறுத்தவரை, அன்னிய முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்குகளில் இருந்து சற்று விலக கூடும்.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் போது, அன்னிய முதலீட்டாளர்களுக்கு 'கரன்சி இழப்பு' ஏற்படுகிறது. அதிக அபாயம், நிச்சயமற்ற பங்கு சந்தை வருமானம் மற்றும் கரன்சி இழப்பு ஆகிய காரணங்களால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதை குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
அதேவேளையில், இந்திய கடன் பத்திர சந்தையில், தற்போதைய சூழல் சற்று சுவாரஸ்யமாக மாறியுள்ளது. தற்போது, இந்திய 10 ஆண்டுகால அரசு கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் 7 முதல் 7.10 சதவீதம் வரை உள்ளது. அமெரிக்க பத்திரங்களின் வட்டி 2.70 சதவீதமாக இருந்த காலத்தில், இந்தியாவின் 7 சதவீத வருவாய் அன்னிய முதலீட்டாளர்களை பெரிதும் ஈர்த்தது.
ஆனால், தற்போது அமெரிக்காவிலேயே 5 சதவீதம் கிடைக்கும் சூழலில், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் செலவுகள் போக, அன்னிய முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் டாலர் வருமானம் குறையும் என்பதால், அன்னிய முதலீடுகள் இந்திய கடன் பத்திர சந்தைக்கு வருவது சற்று மந்தமாகவே இருக்கக்கூடும்.
இருப்பினும், உள்நாட்டு சிறு முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். பங்கு சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் பெற விரும்புவோர், தற்போதைய சூழலில் இந்திய அரசு கடன் பத்திரங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.