Economy, business and finance
நீதிமன்ற பணம் ரூ.75,000- மோசடி செய்த பதிவறை எழுத்தர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் குற்ற வழக்குகளில் பெறப்பட்ட அபராத தொகையை வங்கியில் செலுத்தாமல் ரூ.75 ஆயிரம் கையாடல் செய்த பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற அதிகாரிகள் அசோக்குமார், கோபி ஆகியோர் நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். நீதிமன்ற ஆவணங்கள், வழக்கு டிபாசிட் தொகை வரவு கணக்கு விபரங்களை தணிக்கை செய்தனர். அதில் ரூ.75,000 கையாடல் நடந்திருப்பது தெரிந்தது.
விசாரணையில் பதிவறை எழுத்தராக பணியாற்றிய வத்தலக்குண்டை சேர்ந்த அழகர் 42,குற்ற வழக்குகளில் வழக்குதாரர்கள் நீதிமன்றத்தில் செலுத்திய அபராத தொகையை கருவூல வங்கிக்கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்ததும், வங்கி முத்திரையிட்ட போலி ரசீதுகள் வைத்து ஏமாற்றியதும் கண்டறியப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 6 மாதங்களாக பணிக்கு வராமல் தலைமறைவாக இருந்த அழகர் மீது நிலக்கோட்டை போலீசில் நீதிமன்ற அதிகாரிகள் புகாரளித்தனர்.
விசாரணை நடத்திய போலீசார் பதிவறை எழுத்தர் அழகரை நேற்று கைது செய்தனர்.
அழகர்மீது வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தது, செக் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.