மூலிகை செடி, வேர்களை தேடும் தொழிலாளர்கள்

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி சுற்று வட்டார கிராமங்களில் சித்த மருத்துவத்திற்கு மருந்து தயாரிக்க மூலிகை வேர், செடிகளை கிராமப்புற தொழிலாளர்கள் சேகரித்து வருகின்றனர்.
சித்த மருத்துவத்திற்கு தேவையான வேர், இலை, காய், பழம் ஆகியவற்றை கிராமப்புற விவசாய கூலி தொழிலாளர்கள் பலரும் சேகரித்து மருந்து தயாரிக்கும் நிறுவனங் களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
விருதுநகர் மற்றும் கோவை மாவட்டங்களில் சித்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கூலி தொழிலாளர்கள் நேற்று மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி பகுதிகளில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள சாரநெத்தி, நெருஞ்சி செடிகளின் வேர்களை சேகரித்தனர். ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் அதிகாலை முதல் ஒவ்வொரு வரும் தலா ஐந்து முதல் பத்து கிலோ வரை சேகரித்துள்ளனர்.
பெண் கூலி தொழிலாளர் பாண்டியம்மாள் கூறுகையில், எங்கள் பகுதியில் விவசாய கூலி வேலை பார்க்கின்றோம், வேலை இல்லாத நாட்களில் இதுபோன்று ஊர் ஊராக சென்று வேர் சேகரிக்கிறோம்.
அதிகமாக சாரநெத்தி வேர் தான் கிடைக்கும் அவற்றை தான் விரும்பி வாங்குகின்றனர்.
இவற்றை சேகரித்து உலர வைத்து விற்பனை செய்வோம்.
மழை காலங்களில் செடிகள் அதிகளவில் வளர்ந்திருக்கும், இந்தாண்டு போதிய கோடை மழை இல்லை, இதனால் செடிகள், வேர்கள் போதிய அளவு கிடைக்கவில்லை.
சாரநெத்தி செடிகளின் வேர்கள், கொடிகளை சேகரித்துள்ளோம், வேர்கள் கிலோ 120 ரூபாய், சாரநெத்தி கொடிகள் கிலோ 25 ரூபாய் என வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள், என்றார்.