திருமங்கலத்தில் தனியார் பள்ளி வேன்கள் எரிந்து சேதம்
திருமங்கலம்: திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி வளாகத்தில் 3 வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அவை நிறுத்தப்பட்ட பகுதியில் இருந்து பலத்த சத்தத்துடன் புகை வந்துள்ளது. இரவு காவலர் வந்து பார்த்தபோது 2 வேன்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன.
திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் 2 வேன்களும் முற்றிலும் சேதம் அடைந்தன. மூன்று வேன்கள் நிறுத்தப்பட்ட நிலையில் அருகருகே இருந்த 2 வேன்கள் மட்டும் தீயில் எரிந்தன.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் மாணவிகளை சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு, இரவில் வேனை பள்ளி வளாகத்திற்குள் நிறுத்தி வைத்து உள்ளனர். அதிகாலை என்பதாலும் பள்ளி விடுமுறை என்பதாலும் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.