Politics
சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டை ரயில் பாதைக்கு ரூ.2,242 கோடி ஒதுக்கீடு

நாமக்கல்:சேலம் - கரூர் - திண்டுக்கல் இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு, 2,242 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகள், மூன்றாண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதால், ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் வழியாக சேலம் -- கரூர் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. 2013ல், ரயில் பாதை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது, நாமக்கல் வழியாக, ஐந்து தினசரி ரயில்கள் உட்பட வாரத்திற்கு, 50 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ரயில் மூலம் அரிசி, சக்கரை மற்றும் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவன மூலப்பொருட்கள் பல்வேறு மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்படுகிறது. அதை தவிர தினசரி, 20க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனை கடந்து செல்கின்றது. நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகம் ஆவதால், சேலம் - கரூர் ஒற்றை ரயில் பாதையை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற முடிவு செய்து, தெற்கு ரயில்வே அனைத்து விதமான ஆய்வு பணிகளை முடித்து, ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் அனுப்பியுள்ளது. 2024--25ல் நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பெற்றாலும், நிதி ஒதுக்காமல் திட்டம் தொடங்கவில்லை. இந்நிலையில், 2025-26ம் நிதியாண்டில், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலாளர் கார்த்திக் கூறியதாவது: மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், 'சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் இடையே இரட்டை ரயில் பாதை திட்டம், 159 கி.மீ., துாரத்தில் நிறைவேற்றப்படும். அதற்காக, 2,242 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார். சேலம் - கரூர் புதிய அகல ரயில்பாதை அமைக்கும்போதே, இருவழிப்பாதைக்கு தேவையான அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. மேலும், மோகனுார் - வாங்கல் இடையே காவிரி ஆற்றில், இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில், ஏற்கனவே, ஆற்றில் பில்லர் போட்டு, கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது.
தற்போது, மத்திய அமைச்சர் அறிவித்துள்ளது, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்ட ரயில் பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இத்திட்டம், 2029-30ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.