Health
உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்தார் வங்கதேச மாஜி பிரதமரின் மகள்
ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பதவியை, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா வாசெத், 53, ராஜினாமா செய்துள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல் நடந்த மாணவர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தார் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையம் பதிவு செய்தது.
இந்நிலையில், 2024ல் ஐந்து ஆண்டு கால பதவியாக, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநராக ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா வாசெத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை வங்கதேச அரசு சுமத்தியதையடுத்து, அவர் கடந்தாண்டு முதல் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமையை இனி தான் நம்பப் போவதில்லை என்றும், நீண்டகாலமாக ஊதியமின்றி கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டதால் தன் நிதிநிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, தன் பதவியை ராஜினாமா செய்வதாக சய்மா நேற்று அறிவித்தார்.