காலை சிற்றுண்டி திட்டம் ஆய்வு
வால்பாறை: அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள நிலையில், உணவு தயாரிக்கும் இடத்தை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.
வால்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள, 91 அரசு பள்ளிகளில் படிக்கும், 2,204 மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். நகராட்சி துவக்கப்பள்ளிகளில் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ், 1,074 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரைவில் விரைவுபடுத்தப்படவுள்ளது. இந்நிலையில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தாணுமூர்த்தி வால்பாறையில் ஆய்வு மேற்கொண்டார்.
காலை சிற்றுண்டி தயாரிக்கும் சமையல் கூடத்தையும், பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதையும் ஆய்வு செய்தார்.
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தாணுமூர்த்தி கூறியதாவது:
வால்பாறையில் தற்போது துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இனி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
வால்பாறை தாலுகாவில் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும், 790 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுவர். வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப்பணிகள் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.
ஆய்வின் போது, நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் சுரேந்தர், இளநிலை பொறியாளர் கோபிகா உடன் இருந்தனர்.