குப்பை பஞ்சாயத்து : புதிய திடக்கழிவு மேலாண்மையில் மாநகராட்சி தீவிரம் ; அரசு மருத்துவமனைக்கும் பொருந்தும் என குட்டு

மதுரை:மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. விதிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஏப்., 1 முதல் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளை நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் அமல்படுத்தியது. இதன்படி நாள் ஒன்றுக்கு 100 கிலோ குப்பை சேரும் அலுவலகம், அப்பார்ட்மென்ட், நிறுவனம் அல்லது 20 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்கள் அல்லது 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தும் நிறுவனங்கள், தாங்களே குப்பை மேலாண்மை செய்துகொள்ள வேண்டும்.
இதன்படி ஈர, உலர், சுகாதார, சிறப்பு பராமரிப்பு (பல்பு, பேட்டரிகள் உள்ளிட்டவை) என 4 வகை கழிவுகளாக தரம் பிரித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். கலெக்டர், மாநகராட்சி, போலீஸ் கமிஷனர், அரசு மருத்துவமனை, மீனாட்சி அம்மன் கோயில், தனியார் அப்பார்ட்மென்ட், பெரிய நிறுவனங்கள் உள்ளிட்டவை இவ்விதிக்குள் வருகின்றன. நகரில் பெருங்கழிவு உற்பத்தியாளர்களை அழைத்து மாநகராட்சி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இவ்விதிகளை கடைபிடிக்காத சில அரசு அலுவலகங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்புதிய விதி அரசு மருத்துவமனைக்கும் பொருந்தும். அங்கு நாள் ஒன்றுக்கு 6 -7 டன் குப்பை சேருகிறது. மருத்துவமனை வளாகத்திற்குள் துாய்மை பணி மேற்கொள்ள 'ஸ்மித்' என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதில் 'வளாக குப்பையை மட்டும் ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்படும்' என ஒப்பந்தம் செய்துள்ளது. அதை மாற்றி 'சேகரித்த குப்பையை வெள்ளக்கல் கிடங்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஒப்பந்த மாற்றம் செய்ய வேண்டும்' என மாநகராட்சி நோட்டீஸ் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மாறாக மாநகராட்சி குப்பையை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறது.
அதேநேரம் அதிக குப்பை சேர்வதால் நோயாளிகள் நலன் கருதி 'அக்ரோ' அரசு நிறுவன வாகனங்கள் மூலம் மாநகராட்சி குப்பையை அகற்றியது. அதற்கு அதிக செலவு ஏற்பட்டதால் அந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வளாக குப்பையை அங்குள்ள ஒப்பந்த நிறுவனம் மூலம் மருத்துவமனை நிர்வாகம் தான் மேலாண்மை செய்ய வேண்டும். பெருங்கழிவு உற்பத்தியாளர் குறித்து மாநகராட்சி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கூட அரசு மருத்துவமனை பிரதிநிதி பங்கேற்கவில்லை. இதுகுறித்து கமிஷனர் கவுரவ் குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.