Arts, culture, entertainment and media
வருங்கால சந்ததியினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை; லண்டனில் மோகன் பாகவத் பேச்சு

லண்டன்: வருங்கால சந்ததியினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது; பாரதம் முன்னேறும்போது அது எந்த சர்வாதிகாரியையும், உருவாக்குவதில்லை; போர்களைத் துவங்குவதில்லை; அமைதியை உருவாக்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடந்து கலாசாரம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: பன்முகத்தன்மையும் ஒற்றுமையும் இணைந்து உலகளாவிய மோதல்களைத் தீர்க்க உதவும். வருங்கால சந்ததியினர் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் உலகை சிறந்த இடமாக மாற்ற விரும்புகிறார்கள். இலக்கை நிர்ணயித்துக்கொடுங்கள், வழியை அவர்களே கண்டுபிடிப்பார்கள். பிரிவினைகளைத் தாண்டி நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
பாரதம் முன்னேறும்போது அது எந்த சர்வாதிகாரியையும், உருவாக்குவதில்லை; போர்களைத் துவங்குவதில்லை; அமைதியை உருவாக்கும். தீவிர வெறுப்புதான் எங்கள் பணியின் அடிப்படை என்று சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அது முற்றிலும் நேர்மாறானது. ஒரு ஹிந்து என்பவர் ஒரு தனி நபர் அல்ல; அவர் குடும்பம், தன் சமூகம், தன் சமுதாயம், மனிதகுலம் ஆகிய அனைத்தும் ஆவார். மேலும், நம் அனைவருக்கும் தெரிந்தபடி, ஹிந்துக்கள் இயற்கையை நேசிக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் வழிபடுவது மட்டுமல்ல, இயற்கையையும் நேசிக்கிறார்கள்.
நாம் பகைமை, போட்டி என்றோ, அல்லது 'எனக்கு இது வேண்டும், இது அவனுக்குக் கிடைக்கக் கூடாது; எனக்கு இன்னும் வேண்டும், அதுவும் அவனுக்குக் கிடைக்கக் கூடாது' என்றோ சிந்திக்கும்போது 'அவனுக்கு இது தேவை, எனக்கு இது தேவை, நம் இருவருக்கும் இது கிடைக்க வேண்டும். எனக்குக் கிடைத்தால், அதில் சிறிதளவு அவனுக்கும் கொடுப்பேன்' என்று நாம் அப்படிச் சிந்தித்தால், நாம் இயற்கையை வெல்ல வேண்டியதில்லை; நாமே இயற்கையின் ஒரு பகுதிதான். வளர்ச்சியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குலைக்காமல், அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
நமது முன்னேற்றம் இயற்கையின் முன்னேற்றத்திற்கு வலு சேர்த்து உதவ வேண்டும். வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏன் முரண்பட வேண்டும். ஆகவே, வாழுங்கள், வாழ விடுங்கள், அது மட்டுமல்ல: வாழுங்கள், வாழ விடுங்கள், மற்றவர்களையும் வாழ வையுங்கள். இப்படித்தான் நமது சிந்தனைப் போக்குகள் உருவாகின்றன. பன்முகத்தன்மை என்பது இயற்கையானது. எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டு மதிக்கிறோம். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.