‘பிரச்னையும் தீர்வும்’ பகுதிக்கானது. :: பைபாஸ் ரோட்டில் தேங்கும் மழைநீரால் விபத்துக்கள் அதிகரிப்பு
வடமதுரை: -வடமதுரை நால்ரோடு சந்திப்பு பகுதியில் கன மழைக்கு தேங்கும் மழை நீரால் ரோடு மூழ்கிவிடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து வந்தாலும், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை என, பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை, ஒன்றியத்தின் தலைமையிடமாக உள்ளது. வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இங்கு திண்டுக்கல் திருச்சி பைபாஸ் ரோட்டையும், வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையின் குறுக்கே நால்ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு அனைத்து கன மழை நேரத்திலும் நீர் பெருமளவில் ரோட்டை மூழ்கடித்து தேங்கியுள்ளது. பல்வேறு முன் திட்டமிடலுடன் அமைக்கப்பட்ட பைபாஸ் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் வேதனையுடன் தேங்கிய நீரில் மெதுவாக ஓட்டிச் செல்கின்றனர். ரோட்டோர பள்ளங்கள் இருக்கும் இடம் சரிவர தெரியாமல் போவதால் பள்ளங்களில் செல்லும் வாகனங்கள், நடந்து செல்வோரும் சிக்கும் ஆபத்தும் உள்ளது. இங்கும் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
துர்நாற்றம் நாகராஜ், மாவட்டத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி, வடமதுரை: சில ஆண்டுகளுக்கு முன் வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை ரோடு விரிவாக்கப் பணிகள் நடந்தன. அப்போது நால்ரோடு சந்திப்பில் இருந்து வடமதுரை திசையில் இருந்த பாலத்தை மீண்டும் கட்டமைக்காமல் மூடி உள்ளனர். திருச்சி ரோட்டில் இருக்கும் பாலத்தில் நீர் மறுபக்கம் வெளியேற வழியின்றி நீர் வழித்தடம் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் செலவிட்டு பாலங்கள் கட்டியும் மழை நேரத்தில் இப்பகுதியில் நீர் ரோட்டில் பெருமளவில் தேங்குகிறது. நீர் வெளியேற தற்காலிக ஏற்பாடாக மண்ணை வெட்டி வாய்க்கால் அமைத்தாலும், ஒருசில நாட்களில் மண்சரிந்து நீர் செல்வது தடைப்பட்டு தேங்கி நிற்கிறது. கழிவு நீர் தொடர்ந்து பயணிக்க வழியின்றி ரோட்டில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த வழியே நடந்து செல்வோரும், டூவீலர், வாகனங்களிலும் செல்வோரும் சிரமப்படுகின்றனர்., என்றார்.
விபத்துக்கள் அதிகரிப்பு: சரவணன், வர்த்தக பிரமுகர், பிலாத்து: போக்குவரத்து விரைவாக நடக்க வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டுள்ள பைபாஸ் ரோட்டில் திண்டுக்கல் திசை ரோடு முழுவதும் ஒவ்வொரு கன மழையிலும் முழுவதும் ரோட்டை மறைத்து நீர் தேங்கும் அவலம் வடமதுரையில் நடக்கிறது. இப்பகுதி வழியே ரோட்டை கடந்து செல்ல வேண்டிய நீர் தொடர்ந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. ரோட்டின் மறுபக்கம் நெடுஞ்சாலை இடத்தில் சீராக பயணித்து விரைவாக வெளியேற வழியில்லாத சூழலில் நீர் மணிக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இவ்வழியே செல்லும் டூவீலர்களின் இன்ஜின் பகுதிக்குள் நீர் சென்று பழுதாகின்றன. மேலும் இப்பகுதி நால்ரோடு சந்திப்பில் அதிகளவில் விபத்துகள் நடப்பதால், இங்கு மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு விரைவில் புத்துயிர் தந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்., என்றார்.
பாக்ஸ் மேட்டர்: தீர்வு வடமதுரை பகுதியில் சேகரமாகும் மழை நீர், கழிவு நீருடன் கலந்து பயணித்து பைபாஸ் ரோட்டை கடந்து அருகில் தும்மலக்குண்டு கண்மாய்க்கு உரிய, நீர்வரத்து ஓடையை சென்றடைகிறது. ஆனால் நீர் வழித்தடங்களை மறைத்து மனைகள், வணிக நிறுவனங்கள் உருவானதால், சில இடங்களில் மண்ணிட்டு நிரப்பியும் வைத்துள்ளதால் நீர் வெளியேற வாய்ப்பில்லாமல் உள்ளது. பழைய நீர் வழித்தடத்தை மீட்பது சவாலான விஷயமாக மாறியுள்ளது. எனவே வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டை ஒட்டி பெரிய அளவில் காங்கிரீட் கட்டுமானமாக கழிவு நீர் வாய்க்கால் அமைத்து அரை கி.மீ., துாரத்தில் எரியோடு ரோட்டை கடக்கும் ஓடையில் சேரும்படி வழிவகை செய்ய வேண்டும்., என்றனர்.-