Economy, business and finance
தாலிபான்களின் பிடியில் சிக்கிய சோலோ ட்ரிப்பர்- இந்தியப் பெண் யூடியூபருக்கு நேர்ந்த விபரீதம்

பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள், எந்தவித துணையும் இல்லாமல் ஒரு இந்தியப் பெண் தனியாகப் பயணம் செய்த சம்பவம் சர்வதேச அளவில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த அருணிமா என்ற இளம் பெண் தான் தாலிபான்களின் நேரடிக் கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கி இந்த விபரீதத்தைச் சந்தித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் 'பேக் பேக்கர் அருணிமா' என்ற பெயரில் பக்கங்களை நடத்தி வரும் இவர், உலகம் முழுவதும் தனியாகப் பயணம் செய்து அதனைத் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். அர்ஜென்டினா, பிரேசில், பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சோலோ ட்ரிப் சென்று வந்த இவர், கடந்த ஒரு மாதமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் தனியாகப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள சூழல்களைத் தனது கேமராவில் பதிவு செய்து வந்துள்ளார்.
கடந்த 27 நாட்களாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அருணிமா, கடந்த செப்டம்பர் 14 அன்று மாலை 7 மணி அளவில் லாரி ஒன்றில் லிஃப்ட் கேட்டு ஆப்கானிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாமியான் நகரைச் சென்றடைந்துள்ளார். அங்கு அவர் உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையைப் படம் பிடிக்க முயன்ற போது, தாலிபான் ஆயுதக் குழுவினரின் பார்வை அவர் மீது விழுந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த தாலிபான் அதிகாரிகள் மற்றும் முஜாகிதீன் அமைப்பினர் அருணிமாவைச் சூழ்ந்துகொண்டு, அவரது பாஸ்போர்ட், விசா மற்றும் பயண ஆவணங்களைச் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆப்கானிஸ்தான் சட்டப்படி பெண்கள் யாரும் ஒரு ஆண் துணையோ அல்லது வழிகாட்டியோ இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக் கூடாது, சத்தமாக பேசக்கூடாதுஎன்ற கடுமையான விதிமுறை அங்கு அமலில் உள்ளது. ஏற்கனவே ஜலாலாபாத் பகுதியில் தனியாகப் பயணம் செய்ததால் பயண அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில், எந்தவித ஆண் துணையும் இல்லாமல் பாமியான் நகருக்குள் தனியாக நுழைந்தது தாலிபான் சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. இதனால் தாலிபான் அதிகாரிகள் அருணிமாவைத் தடுத்து நிறுத்தி, அவர் சட்டத்தை மீறிவிட்டதாகவும், அவரை கைது செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாலிபான்களின் கடுமையான காவலில் வைக்கப்பட்டு அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆவணங்களைச் சரியாகப் படிக்கத் தெரியாத தாலிபான்கள், அவரைத் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதால் எந்த நிமிடத்தில் தனக்கு என்ன நேருமோ என்ற மரண பயத்தில் அருணிமா உறைந்து போனார். இந்த இக்கட்டான விபரீதச் சூழலில் இருந்து தப்பிக்க, அருணிமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அவசர உதவிப் பதிவை வெளியிட்டார்.
அதில், "நான் ஆப்கானிஸ்தானின் பாமியான் பகுதியில் முஜாகிதீன்களிடம் பெரும் ஆபத்தில் இருக்கிறேன், தயவுசெய்து என்னை இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள யாராவது உதவுங்கள்" என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பின்னர், தனக்கு முன்னரே அறிமுகமான ஒரு உள்ளூர் நபரின் உதவியோடு தாலிபான் அதிகாரிகளிடம் நீண்ட நேரம் கெஞ்சிப் பேசி, ஒருவாறாகக் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, அவர் தாலிபான்களின் பிடியில் இருந்து தப்பித்து, ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஸ்பெகிஸ்தான் எல்லையை நோக்கிப் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தனது அடுத்த பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகத் தான் ஆப்கானிஸ்தான் மண்ணில் நரக வேதனையை அனுபவித்ததாக அருணிமா தனது காணொளியில் வேதனையோடு பகிர்ந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)