பள்ளிக்கூடம் கட்டி தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

ஒடுகத்துார்: மராட்டிபாளையத்தில் பள்ளிக்கூடம் கட்டி தரக்கோரி, அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலுார் மாவட்டம், ஒடுகத்துார், அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மராட்டிபாளையத்தில் இயங்கி வந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 1 முதல், 5ம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இங்குள்ள பள்ளி கட்டடங்கள் முழுதும் சிதில மடைந்ததால், 10 மாதங்களுக்கு முன், இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து, அதே பகுதியில் மேற்கூரைகள் தகர சீட்டுகளால் ஆன, வாடகை கட்டடத்தில், 1 முதல், 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர். ஆய்வு நடத்திய அதிகாரிகள், 'உடனடியாக, பள்ளி கட்டடம் கட்டி தருகிறோம்' எனக்கூறியும், இதுவரை கட்டி தரவில்லை. இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாணவர்கள், அணைக்கட்டு - ஒடுகத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் .
வேப்பங்குப்பம் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.