Politics
புதிய தலைமை செயலகம் திட்டம் ரத்து செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பிக்கக்கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்

புதிய தலைமைச் செயலகம் திட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய்க்கு ஈபிஎஸ் வலியுறுத்தல். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை த.வெ.க. அரசு கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெ
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் நிறைந்துள்ள, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை த.வெ.க. அரசு கைவிட வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.
இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
