Arts, culture, entertainment and media
The Paradise | ட்ரெய்லர் இல்லாமல் ரிலீஸாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் - நானி அறிவிப்பு!

“தி பாரடைஸ் படம் ட்ரெய்லர் இல்லாமல் வெளியாகும்” என தெலுங்கு நடிகர் நானி தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நானி, “பாரடைஸ் படத்துக்கு ட்ரெய்லர் தேவையில்லை என நினைக்கிறேன். எனக்கு அதில் விருப்பமில்லை என்றாலும், ஒரு நல்ல ட்ரெய்லரை கட் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஒட்டுமொத்த குழுவும் இணைந்து அது வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம்.
இந்தப் படத்தை நான் பான் இந்தியா என சொல்ல விரும்பிவில்லை. இந்தப் படத்துக்கு தெலுங்கு பார்வையாளர்களே முதன்மையான ரசிகர்கள். மற்ற மொழி ரசிகர்களும் இந்தப் படத்தை பார்த்து ரசிப்பார்கள் என நம்புகிறேன். இது வெறும் வன்முறை படம் என்று நினைத்துவிட கூடாது. தாய் - மகன் அன்பை பேசும் இந்தப் படம் பல அழுத்தமான காட்சிகளையும் கொண்டிருக்கிறது” என்றார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘தி பாரடைஸ்’. இந்தப் படத்தில் நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மார்ச் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 21 வெளியாகும் என ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக தற்போது வரும் செப். 24 படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
